பாலியல் குற்றச்சாட்டு: கல்லூரி சேர்மனுக்கு சிறை… வங்கிக் கணக்கை முடக்க ஆட்சியர் உத்தரவு!

அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் செயல்பட்டுவரும் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதேக் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவிக்கு, வீடியோ கால் செய்து பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் கைதுசெய்தனர். தொடர்ந்து, தாஸ்வின் ஜான்கிரேஸ், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 24-ம் தேதிவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தாஸ்வின் ஜான்கிரேஸ் விருதுநகர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி பாதுகாப்பு கேட்டும், உரிய நீதி பெற்றுதர வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மேகநாதரெட்டியை இன்று சந்தித்து முறையிட்டனர்.

தாஸ்வின் ஜான்கிரேஸ்

அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ஆட்சியர் மேகநாதரெட்டி, “சம்பந்தப்பட்ட கல்லூரியிலிருந்து வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழும், தடைப்பட்ட படிப்பை வேறு கல்லூரிகளில் தொடர்வதற்கும் கல்வித்துறையிடம் பேசி காலியிடம் உள்ள கல்லூரிகளில் அட்மிஷன் பெற்று தருவதற்கு மாற்று ஏற்பாடுகள் முதற்கட்டமாக செய்யப்படும். பாலியல் குற்றச்சாட்டையடுத்து கல்லூரி முழுவதும் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் பயப்பட தேவையில்லை. மாணவர்கள் செலுத்தியக் கல்விக்கட்டணத்தை திரும்ப அளிப்பதற்கு பின்னர் முயற்சிகள் எடுக்கப்படும். இறுதியாண்டு மாணவர்கள் தங்களது பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம். அதற்கு எவ்வித தடையும் இருக்காது. கல்லூரியிலிருந்து எவ்விதமான அசையும், அசையா சொத்துகளும் வெளியே எடுத்துச்செல்ல தடை விதிக்கப்படுகிறது. இதை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்து கவனிப்பார்கள்.

கல்விக்கடன், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட விவகாரங்கள் முடியும் வரை கல்லூரி வங்கிக் கணக்கில் எந்தவிதமான பணப்பரிவர்த்தனையும் கல்லூரி நிர்வாகத்தினர் மேற்கொள்ளக்கூடாது. எனவே, சுமுகத்தீர்வு ஏற்படும் வரை கல்லூரி வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்படும். விசாரணை என்கிற பெயரில் மாணவர்களை போலீஸார் தொந்தரவு செய்யவோ, தரக்குறைவான வார்த்தைகளால் பேசவோ கூடாது. எந்தவிதத்திலும் மாணவர்களை மிரட்டும் தொணியை கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் கையாளக்கூடாது.

மாவட்ட ஆட்சியருடன் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
கட்சி பொறுப்பு நீக்க அறிவிப்பு

ஏதேனும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால் அதுகுறித்து மாணவர்கள் நேரடியாக எனது செல்போன் எண்ணில் புகார் அளிக்கலாம். விடுதியில் தங்கி படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் விடுதியிலேயே தங்கிக் கொள்ளலாம். சொந்த ஊர் திரும்ப நினைப்பவர்கள் ஊருக்குச் செல்லலாம். நிர்வாக அறையிலுள்ள மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் கல்வி நிறைவுச் சான்றிதழ் தொடர்பாக நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் யாரும் எவ்வித அலுவல்களையும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையின்றி செய்யக்கூடாது. அரசியல் தலையீடின்றி இந்த பிரச்னையை கடந்த செல்ல அடுத்தக்கூட்டத்திற்கு மாணவர்கள் மட்டும் வரவேண்டும். மாணவர்களின் பெற்றோரோ, கட்சியினரோ கலந்துகொள்ள வேண்டாம்” என்றார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தனியார் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான்கிரேஸ், பா.ஜ.க சிறுபான்மை பிரிவு முன்னாள் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றியவர் என்பது ஊடகங்களில் வெளியான நிலையில், தாஸ்வின் ஜான்கிரேஸை பா.ஜ.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.