ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு… போலீசார் தாக்கியதால் ஏற்பட்டதா?

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் காலை 11 மணி தொடங்கி சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியினர் இன்று பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து வேனில் ஏற்றியதாகவு்ம். அதில் அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே , இந்த சம்பவம் தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மூன்று போலீசார் உங்களை கடுமையாக தாக்கும்போது, உங்கள் கை எலும்பு முறியாமல், விரிசலுடன் தப்பிக்க நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறிய அளவிலான இந்த எலும்பு முறிவு ( hairline crack) 10 நாட்களில் சரியாகிவிடும் என்றும், நாளை முதலே எனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்’ எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்காக சோனியா காந்தியையும் ஆஜராக சொல்லி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கொரோனா காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை 23 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.