கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. இவர், முகமது நபிகளை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை டிஜிபி மனோஜ் மாளவியா தெரிவித்தார்.
இதற்கிடையில் சர்ச்சைக் கருத்தை முன்வைத்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 20 ஆம் தேதியன்று நார்கல்டங்கா காவல் நிலையத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூபுர் சர்மாவின் சர்ச்சைக் கருத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. சர்மாவின் பேச்சைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு பொதுச் செயலாளர் அபுல் சோஹாலி கன்ட்டாய் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.