வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து பாடம் கவனித்த ஸ்டாலின்; அரசுப் பள்ளியில் ஆய்வு

MK Stalin inspects Govt school in Tiruvallur: தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ கற்றல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் மற்றும் பிழையின்றி எழுதி, படிப்பை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே, இந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் நோக்கமாகும்.

இதையும் படியுங்கள்: தனியார் பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

இந்தநிலையில், கோடை விடுமுறைக்குப் பின்னர், தமிழகம் முழுவதும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ​​10 ஆம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியை பாடம் நடத்தும் முறையை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கவனித்தனர். இதனைத்தொடர்ந்து அரசுப் பள்ளியில் சமயலறை உள்ளிட்ட இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், கட்சி சார்பற்ற முறையில் எம்.பி, எம்.எல்.ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டறிந்தால் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ – மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.