வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு; ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை: திருத்தப்பட்ட சட்ட அறிவிப்பை வெளியிட அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாலும், இது கட்டாயமாக்கப்படாது எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர்களில் வெவ்வேறு முகவரிகளில் வசிப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் முறைகேடுகள் களையப்படும் என கூறப்படுகிறது.  முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு 6 முக்கிய சீர்திருத்த திட்டங்களை அனுப்பியுள்ளது. தகுதியுடையவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய நான்கு கட்ஆப் தேதிகள் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்து, அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நன்கொடைகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்காதது, பெயர் மாற்றம், தலைமையகம், அலுவலகம், முகவரி மாற்றம் குறித்து தெரிவிக்காமல் இருப்பது உள்ளிட்ட விதிகளை மீறிய 21,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது கடந்த மாதம் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் நன்கொடை படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29(அ) விதிகளின் கீழ் வருகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே, அந்த சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடைசெய்யும்  முன்மொழிவுகளை மறுஆய்வு செய்யவும், வேட்பாளர் போட்டியிடக்கூடிய இடங்களின்  எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.ஒரு  வேட்பாளர் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகத்திடம் தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிடும்’ என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.