குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் காண்கிறாரா சரத் பவார்?

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க பா.ஜ.க-வும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகை

குடியரசுத் தலைவர் தேர்தல்:

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இந்த மாதம் ஜூன் 15-ம் தேதி தொடங்கி, ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்ளாக, தங்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்:

பா.ஜ.க சார்பில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரில் ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது. அதேசமயம், தற்போது இருக்கும் ராம்நாத் கோவிந்தே மீண்டும் குடியரசுத் தலைவராக நிறுத்தப்படலாம் எனவும் கருதப்படுகிறது.

குடியரசுத் தலைவர் – பிரதமர்

ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்:

இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு எதிராக வலிமையான மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு நபரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்து கலந்தாலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகின்ற ஜூன் 15-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப்பேசி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் ஒருமித்த முடிவை எட்டுவதற்குத் தீர்மானித்திருக்கிறார். அதேசமயம், மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, அதேநாளில் தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சோனியா, சரத் பவார், உத்தவ் தாக்கரே

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்:

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால், பா.ஜ.க அல்லாத பொது வேட்பாளரை தேர்வு செய்ய, மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கடந்த வியாழக்கிழமை சரத் பவாரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதேபோல, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசி மூலமாக சரத் பவாரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். மேலும், தனது கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கை நேரடியாக மும்பைக்கு அனுப்பி சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி மட்டுமல்லாமல் ஏனைய எதிர்க்கட்சிகளும் சரத் பவாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

கோப்புக் காட்சி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நியமிக்க சரத் பவார்தான் சிறந்தத் தேர்வாக இருப்பார் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன்மொழியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத், “நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவராக சரத் பவார் இருக்கிறார். அவரை 2022-ல் நடைபெறவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளின் வேட்பாளராக கருத வேண்டும்! அவரை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 2022-ம் ஆண்டுக்குள், எங்கள் தரப்பிலிருந்து குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய எங்களுக்கு போதிய பலம் கிடைத்து விடும்” எனப் பேசினார்.

சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டம்

அதன்பிறகு, 2021-ம் ஆண்டு ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டுமுறை சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் இணைந்து, சரத் பவார் வீட்டில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின.

அதைத்தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் சரத் பவாரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், “குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவார் முன்னிறுத்தப்படுவதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. எந்த கட்சியுடனும் அப்படி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை! மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தற்போது நடைபெறப்போவதில்லை. அதற்கு காலம் உள்ளது” என தெரிவித்தார்.

சரத் பவார், மம்தா பானர்ஜி

இந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி (18-07-2022) அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவராக சரத் பவாரை முன்னிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சரத் பவார் – உத்தவ் தாக்கரே

ஏன் சரத் பவார்?

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைக்கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதி. குறிப்பாக, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருடன் சிறந்த நட்புறவில் இருந்து வருகிறார். தற்போது, மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் இருக்கிறார். கடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.கவை ஆட்சிக்கட்டிலில் அமரவிடாமல், மகாராஷ்டிரா விகாஸ் அகாடி எனும் பெயரில் சிவசேனா, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தி சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவை முதல்வராக அமரச்செய்ததில் முக்கியப் பங்காற்றினார். (மேலும், சரத் பவாரின் சகோதரர் அஜித் பவார்தான் தற்போது மகாராஷ்டிர மாநிலத் துணை முதல்வராகவும் இருக்கிறார்.)

குடியரசுத் தலைவர் தேர்தலில் குறைந்தபட்சம் 51% வாக்கு மதிப்பு பெற்றவர்களே வெற்றிபெற முடியும் எனும் சூழலில், பா.ஜ.கவுக்கு 49% சதவிகித வாக்கு மதிப்பு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 23% சதவிகித வாக்கு மதிப்பு இருக்கிறது. பா.ஜ.கவே வெற்றிபெறும் சூழ்நிலை இருந்தாலும், எதிரணியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அவற்றின் வாக்கு மதிப்புடன் பா.ஜ.க கூட்டணிக்கு டஃப் கொடுக்க முயற்சி செய்துவருகிறது. அதற்காக சரத் பவாரை நிறுத்த ஆலோசனை நடத்திவருகிறது. ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் கூட, பொது வேட்பாளராக சரத் பவாரை நிறுத்தலாம் என திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

சரத் பவார்

இந்த நிலையில், அதற்கேற்ப, பா.ஜ.கவும் குடியரசுத் தேர்தலில் போட்டியைத் தவிர்த்து, மறைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தேர்ந்தெடுத்ததுபோல, பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க முன்வந்திருப்பதாகவும், அதற்காக எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் தலைமையில் குழு ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2024 -ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான முன்னோட்டமாகவும் இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பார்க்கப்படுவதால் அதிக கவனம் பெற்றிருக்கிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.