இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு| Dinamalar

கொழும்பு:இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தத்தளித்து வருகிறது.’இலங்கை பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்து விட்டது’ என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பார்லி.,யில் அறிவித்தார்.

இந்நிலையில், நம் வெளியுறவு துறை செயலர் வினய் கவத்ரா தலைமையிலான குழு, இலங்கை சென்றுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசித்து உரிய தீர்வுகளை வழங்க சென்றுள்ள இக்குழுவில், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்’ என, உறுதி அளிக்கப்பட்டதாக வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.இந்தாண்டு ஜனவரி முதல், இந்தியா இலங்கைக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.