என்.ஐ.ஏ., புதிய டைரக்டர் ஜெனரலராக தின்கர் குப்தா நியமனம்| Dinamalar

புதுடில்லி : என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி, தின்கர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாபில், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான தின்கர் குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓய்வு பெறும் வரை, அதாவது, 2024, மார்ச் 31 வரை இப்பதவியை வகிப்பார். தின்கர் குப்தாவின் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மத்திய ஆயுதபடை டி.ஐ.ஜி., குல்தீப் சிங், கூடுதல் பொறுப்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக உள்ளார். மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின், உள்துறை பாதுகாப்பு பிரிவின் சிறப்பு செயலர் பதவிக்கு, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான சுவாகத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1987ல் சத்தீஸ்கரில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான இவர், 2024, நவ.,30ம் தேதி வரை இப்பதவியில் பணியாற்றுவார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.