நிலநடுக்க மீட்பு நடவடிக்கை: திணறி தவிக்கும் ஆப்கன்| Dinamalar

கயன்:ஆப்கன் நிலநடுக்கத்தில்சிக்கியவர்களை மீட்க போதுமான இயந்திர வசதிகள் இல்லாததால், கைகளால் மண் குவியலை அகற்றி உள்ளே சிக்கியோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.தெற்காசிய நாடான ஆப்கனின் கோஸ்ட் நகரில், நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான் அரசு ஒப்புதல்

இங்கு, இறந்து போனவர்களின் உடல்களை மீட்கவும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுவோரை உடனடியாக காப்பாற்றவும் முடியாத நிலை உள்ளது. கிராம மக்கள் கைகளால் மண் குவியல்களை அகற்றி உள்ளே சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.இது போன்ற நிலை வேறு நாட்டில் ஏற்பட்டிருந்தால், உலக நாடுகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பி இருக்கும்; நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருக்கும்.
ஆப்கனை பயங்கரவாத குழுவான தலிபான்கள் ஆட்சி செய்வதால், பல நாடுகள் உதவி செய்ய ஆர்வமின்றி உள்ளன. தலிபான் அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வது எந்த அளவிற்கு மக்களை சென்று சேரும் என்ற கேள்வியும், ஆர்வக் குறைவுக்கு காரணம்.அதேசமயம் தலிபான் அரசும், ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம், மீட்பு பணிக்கு வெளிப்படையாக உதவி கோராமல் உள்ளது. இருந்த போதிலும் ஐ.நா., அமைப்புகள், நிலச்சரிவு இடங்களை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்க தலிபான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிவாரண பொருட்கள்
அண்டை நாடான பாக்., எட்டு லாரிகளில் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஈரான், கத்தார் ஆகிய நாடுகளும் விமானத்தில் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளன.கடந்த ஆண்டு ஆப்கனில்ஜனநாயக முறையில் அமைந்த அரசை விரட்டி விட்டு, தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் தலிபான்கள்தலைமையிலான அரசை, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
அதேசமயம் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு, இந்தியா மனிதநேய அடிப்படையில் உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது.கடந்த, 2002ல் வடக்கு ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில், 4, 500 பேர் இறந்தனர். இதையடுத்து தற்போது கோஸ்ட் நகரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தான் அதிக அளவில் மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.