பாஜ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவு அதிகரிப்பு: இன்று வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: பாஜ கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது. பிஜு ஜனதா தளம், பாஜ கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற முர்மு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மோடி முன்னிலையில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ஜனாதிபதி  தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதில், பாஜ  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவைச் சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர்  யஷ்வந்த் சின்கா களமிறங்குகிறார். இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். இந்நிலையில், பாஜ வேட்பாளர் முர்மு இன்று தனது  வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக முர்மு நேற்று புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். அவரை டெல்லி மாநில பாஜ தலைவர் ஆதேஷ் குப்தா, எம்.பி. மனோஜ் திவாரி, டெல்லி  சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் பிதுரி உட்பட பல பாஜ  தலைவர்கள், விமான நிலையத்தில் மேளதாளத்துடன் வரவேற்றனர். பின்னர், அவர் ஒடிசா பவனுக்கு சென்றார். முர்முவின் வேட்பு மனுவை பிரதமர் மோடி, மூத்த ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் முன்ழொழிய உள்ளனர். இவர்கள், பிரகலாத் ஜோஷி வீட்டில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர். இதற்கிடையே, தற்போது இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் ஆதரவு கோரி ஜேபி.நட்டா நேற்று பேசினார். இதைத் தொடர்ந்து, முர்முவுக்கு தனது பிஜு ஜனதாதளத்தின் ஆதரவை தெரிவித்த பட்நாயக், ஒடிசா மாநில பழங்குடியினர் மற்றும் பட்டியல் பிரிவினர் மேம்பாட்டு அமைச்சர் ஜெகநாத்  சரகா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  துகுனி சாஹூ ஆகியோரை டெல்லி செல்ல உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் நேற்று டெல்லி சென்று ஒடிசா பவனில் முர்முவை சந்தித்து, வேட்புமனுவை வழிமொழிந்து  கையெழுத்திட்டனர். பிரதமர் மோடி முன்னிலையில் முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியை முர்மு சந்தித்து பேசினார். இதுகுறித்து, பிரதமர் மோடி வெளியிட்டு டிவிட்டரில் பதிவில், ‘திரவுபதி  முர்மு ஜி என்னை சந்தித்தார். அவரது ஜனாதிபதி நியமனம் இந்தியா முழுவதும்  சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் பாராட்டப்பட்டது. அடிமட்டப்  பிரச்னைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான  தொலைநோக்குப் பார்வை சிறப்பானது’ என்று கூறி இருந்தார். டெல்லியில் புறப்படுவதற்கு முன் முர்மு  வெளியிட்ட அறிக்கையில், ‘ஜனாதிபதி  தேர்தலுக்கு அனைவரிடம் இருந்தும் ஒத்துழைப்பைக் கோருகிறேன். ஜூலை 18ம்  தேதிக்குள் அனைத்து வாக்காளர்களையும் (எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள்) சந்தித்து  அவர்களின் ஆதரவைப் பெறுவேன்’ என்று கூறியுள்ளார் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, வரும் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில், முர்முவுக்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்  இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் அணியில் உள்ள கட்சிகளும், பழங்குடியின இடத்தை சேர்ந்த இதர கட்சி எம்பி.க்களும் கட்சி பாகுபாடின்றி ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா  பானர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டிய போது, அதற்கு முதலில் ஆதரவு தெரிவித்த கட்சிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஒன்று. தற்போது, தனது மாநிலத்தில் ஆளுநராக இருந்த காரணத்தினாலும், பழங்குடியின பிரிவை சேர்ந்த பெண் என்பதாலும் முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன் தள்ளப்பட்டு உள்ளார். இதனால், இவருடைய கட்சியும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மேலும் பல கட்சிகளின் ஆதரவு எதிரணியில் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேகாலயா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு?   தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுக்கு மேகாலயா ஆளும் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. மேகாலயா ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. வாக்களிக்கும்  உரிமையை இழக்கும் ஜம்மு காஷ்மீர்* 1974ல் குஜராத் அரசு, 1982ம் ஆண்டு அசாம் அரசு, 1992ல் நாகாலாந்து மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள் கலைக்கப்பட்டதால், அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இந்த 4 மாநிலங்கள் இழந்தன. * 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஆனால், இதுவரையில் இங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கவில்லை. இதனால், வரலாற்றில் 2வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ஜம்மு காஷ்மீர் மாநில எம்எல்ஏ.க்கள் இழக்கின்றனர். * காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 5 மக்களவை எம்பி.க்களான பரூக் அப்துல்லா, ஹஸ்னைன் மசூதி, அக்பர் லோன், ஜுகல் கிஷோர் சர்மா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மட்டும் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.