அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? தமிழக அரசின் புதிய முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கும் இச்செயலை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

கல்வியையும், சுகாதாரத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்களின் உயிரைப் பறிக்கும் மதுவை அரசே விற்பனை செய்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் அமைவிடம், எண்ணிக்கை தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது திமுக. இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், கருப்பு உடையணிந்துப் போராட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. திமுக ஆட்சியிலும் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவது தொடர்கிறது.

கடந்த சில மாதங்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. விபத்துகள், பெண்களிடம் அத்துமீறல், தகராறு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இந்நிலையில், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

அதுமட்டுமின்றி, மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்  கடைகளை மூடுவதைவிட்டுவிட்டு, புதிது புதிதாக மதுக்கடைகளைத் திறப்பது கண்டனத்துக்குரியது.

புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும் பெயரளவுக்குத்தான் உள்ளது. கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காகவா திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?

அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, கடைகளை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால், குடிப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

எனவே, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதைக் கைவிட வேண்டும். மேலும், ஏற்கெனவே மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.