அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்'

திரில்லர் கதைகளை தேடி நடித்து ரசிகர்களுக்கு திரில்லிங் அனுபவங்களை கொடுத்து, தற்போது கிடா மீசை கெட்டப்பில், கிராமத்து கதாநாயகனாக களமிறங்கி, திரையில் திருவிழா கொண்டாட தயாராகி வரும் நடிகர் அருள்நிதி மனம் திறக்கிறார்.

பெரிய மீசையுடன் இருக்கீங்களே என்ன லுக்
‛ராட்சசி' இயக்குனர் கவுதம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன். கிராமத்து கதைக்கு ஏற்ற லுக் தான் இது. படப்பிடிப்பு ஆரம்பித்து 4 நாட்கள் தான் ஆச்சு. உடம்பு வெலவெலத்து போச்சு, 8 கிலோ எடையும் குறைச்சிருக்கேன்.

ஒரு கதையை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்
முதல் படம் ‛வம்சம்'. இயக்குனர் பாண்டிராஜ் நல்லா நடிச்சிருக்கீங்கன்னு கூறினார். ‛மவுன குரு' அனைவரும் ஏற்கும்படி இருந்தது. இயக்குனர் சாந்தகுமாருக்கு நன்றி. அதற்கு பின் பொறுப்பு வந்திருச்சு. கொடுத்த கதையை சரியா பண்ணனுங்கற எண்ணம் பிறந்தது.

‛டி பிளாக்'ங்குற தலைப்பு ஏன்
‛டி பிளாக்' படத்தில் முக்கிய பகுதி. அந்த பிளாக் கதையை ஒட்டி வருவதால் அந்த தலைப்பு. கோவையில் நடந்த உண்மை சம்பவ பின்னணியில் எடுக்கப்படும் திரில்லர் படம்.

சரி சண்டை வந்து சட்டை கிழிந்த சம்பவம்
படிக்கும் காலத்தில் யாரையாவது அடிச்சுட்டு நான் மாட்ட கூடாதுன்னு நானே என் சட்டையை கிழிச்சிடுவேன். அப்பா கூட கல்லூரிக்கு வந்து என் படிப்பு பற்றியெல்லாம் விசாரித்துள்ளார். அம்மாவை விட அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

காதல் காட்சிகளில் நடிப்பது கஷ்டமா..
இப்போது அந்த அளவுக்கு கஷ்டம் இல்லை. என் நேரமா என்னனு தெரியல என் கதைக்கு பெருசா காதல் காட்சிகள் தேவைப்பட்டது இல்லை.

அருள்நிதி மார்க்கெட் நிலவரம் என்ன
இதுவரை ஆண்டிற்கு ஒரு படம் தான் பண்ணிட்டு இருந்தேன். கொரோனா காலம் என்பதால் 3 படம் ஒரு ஆண்டில் ரிலீஸ் ஆகுது. ரொம்ப அதிகமாக இல்லை, ரொம்ப குறைவும் இல்ல. நம்ம மார்க்கெட் நிலவரம் நல்லா தான் இருக்கு.

உங்க படங்கள் பார்த்து வீட்டில் விமர்சனம்
குடும்பத்தினர் என்னை உற்சாகப்படுத்தி இருக்காங்களே தவிர குறை சொன்னதில்லை. நடிப்பு நல்லா இருக்குனு அக்கா, மனைவி நாசுக்காக படம் பற்றி சொல்லுவாங்க.

நீங்களும் உதயநிதியும் நடிக்கும் படி கதை
கொஞ்ச நாள் முன்னாடி அண்ணன், தம்பி கதை இருக்குனு கூறினர். அந்த டைம் அண்ணன் உதயநிதி தேர்தலில் பிஸியா இருந்தார். பிறகு வேற படம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எதிர்காலத்தில் கண்டிப்பா சேர்ந்து நடிப்போம்.

எதிர்கால அரசியலில் அருள்நிதி இருப்பாரா
எதிர்காலத்தை பற்றி நான் யோசிக்கவில்லை. இப்போதைக்கு மக்களுக்கு சரியான படங்கள் கொடுக்க நினைக்கிறேன். நடிகனா பெயர் எடுக்கணும் என்பது தான் என் மனதில் இருக்கும் விஷயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.