ஸ்வப்னாவுக்கு மிரட்டல்… அமலாக்கத்துறை சம்மன்: யார் இந்த சாஜ் கிரண்!

கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். வாக்குமூலத்தை அடுத்து ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதனால் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல் செய்தும், கருப்புக்கொடி காட்டியும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனிடையே, முதல்வர் பினராயி விஜயனின் ஆதரவாளரான சாஜ் கிரண் என்பவர் தன்னை செல்போனில் அழைத்து, தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும் எனவும், அதுகுறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி மிரட்டியதாகவும் ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டினார். அது தொடர்பாக ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டார்.

அதனபடிப்படையில், சாஜ் கிரணிடம் விசாரணை நடத்த முடிவு செய்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, இன்று அவர் ஆவணங்களுடன் ஆஜராகவுள்ளார். மேலும், கால அவகாசம் கொடுத்தா தன்னிடம் இருக்கும் ஆவணங்களைத் தரவும் அவர் முன்வந்துள்ளார்.

சாஜ் கிரண் கொச்சியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர். அவரது பெற்றோர் கோட்டாரக்கரையை சேர்ந்தவர்கள். சாஜ் கிரண் தனது குழந்தை பருவத்தை திருவலாவில் கழித்துள்ளார். 36 வயதாகும் அவர், பல்வேறு மலையாள செய்தி சேனல்களில் 2016ஆம் ஆண்டு வரை பத்திரிகையாளராக பணி புரிந்துள்ளார். இரண்டாவது திருமணத்துக்கு பின்னர் பத்திரிகையாளர் பணியை துறந்த அவர், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில் கால் பதித்தார். தற்போதுள்ள விவரங்களின்படி, ஐந்து நிறுவனங்களில் அவர் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.