“கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படக் காரணமே சச்சின் தான்!" – தோனி #AppExclusive

ந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட நாட்களாக இருந்த ஒரு குறை, தகுதியான ஒரு விக்கெட் கீப்பர் இல்லை என்பதே. ஆடம் கில்கிறிஸ்ட், சங்ககாரா என ஒவ்வோர் அணியிலும் ஒரு விக்கெட் கீப்பர் கலக்கிக் கொண்டிருக்க, `நமக்கு எப்போது அப்படி ஒருவர் கிடைப்பார்?’ என, பல வருடங்களாக ஏங்கிக்கிடந்தோம். நம் எல்லோர் ஏக்கத்துக்கும் சேர்த்து, வட்டியும் முதலுமாக இன்று கிடைத்திருக்கிறார் தோனி. இந்த ஆண்டில் மிக அதிகமாக 23 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ள தோனியை, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்தித்தோம்…

MS Dhoni’s Exclusive Interview

‘`டெண்டுல்கர், கங்குலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகே புகழ் அடைந்துள்ளனர். ஆனால், உங்கள் விஷயத்தில் அந்தப் புகழ் சீக்கிரம் வந்துவிட்டதே?”

“எனக்கும் அது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் இரண்டு சதங்களை அடித்ததைத் தவிர, நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. பரூக் இன்ஜினீயரைப் போன்றோ, கிர்மானியைப் போன்றோ நான் சிறந்த விக்கெட் கீப்பரும் அல்ல.

மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங்குகளைச் செய்து சாதிக்கவில்லை. இருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக நான் அடித்த 148 ரன்கள், என்னை ரசிகர்கள் மனதில் நிற்கவைத்துவிட்டது. இப்போது இலங்கைக்கு எதிரான தொடரில் 183 ரன்களை எடுத்ததும், ரசிகர்கள் தங்கள் மனதில் எனக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார்த்திவிட்டார்கள். எங்கே போனாலும் என்னைச் சுற்றிக்கொள்கிறார்கள். ஆட்டோ கிராஃப் கேட்டு அன்புத்தொல்லை செய்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம், பயமாகவும் இருக்கிறது. ஒரு வீரர் சில போட்டிகளில் ரன் குவித்துவிட்டால், அவர் தொடர்ந்து அப்படியே ஆட வேண்டும் என எதிர்பார்ப்பது இந்திய ரசிகர்களின் மனோபாவம். அவர்களின் இந்த எதிர்பார்ப்பை ஒன்றிரண்டு போட்டிகளில் நிறைவேற்றாமல் போனாலும், அவர்களுக்குக் கோபம் வந்துவிடும். கன்னாபின்னாவெனத் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். நம் மீடியாக்களும் அப்படித்தான். ஒரு வீரரை எந்த அளவுக்குத் தூக்கி எழுதுவார்களோ, அவர் சொதப்பினால் அதே அளவுக்குத் தாக்கியும் எழுதுவார்கள். எனவேதான், எல்லோரும் புகழும் நிலைக்கு வந்த பிறகு, இதில் இருந்து இறங்கி திட்டு வாங்கக் கூடாதே என்று பயமாக இருக்கிறது.”

“மற்ற இந்திய வீரர்களுக்கு எல்லாம் இல்லாத கட்டுமஸ்தான உடல் உங்களுக்கு இருக்கிறதே… தினமும் எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்வீர்கள்?”

“உடற்பயிற்சியா! நல்லா கேட்டீங்க. அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்” என்று சிரிக்கிறார் தோனி. ‘`கிரிக்கெட் பயிற்சி முகாம் நடக்கும்போது மட்டும் சில நாட்கள் உடற்பயிற்சி செய்வதோடு சரி. என் இந்த உடம்புக்குக் காரணம், என் ஜார்கண்ட் மாநிலம்தான். மலைகள் நிறைந்த பகுதி அது. பல இடங்களுக்கும் நடந்துதான் போகவேண்டியிருக்கும். அந்த நடையும், சிறு வயதில் நான் ஆர்வத்தோடு கலந்துகொண்டு விளையாடிய கால்பந்து போட்டிகளும்தான் எனது இந்த உறுதியான உடம்புக்குக் காரணம்.”

MS Dhoni’s Exclusive Interview

“கிரிக்கெட்டில் உங்கள் குருநாதர் யார்?”

“கால்பந்துதான் உலகம் என்று இருந்த எனக்கு, கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சச்சின். அவரது ஆட்ட ஸ்டைலும், அவருக்குக் கிடைத்த புகழும்தான் என்னை கிரிக்கெட்டுக்கு இழுத்தன. ஆனால், இந்திய அணிக்கு வந்த பிறகு, எனக்கு பேட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து பாலிஷ் செய்தவர் சேவாக். அந்த வகையில் சச்சின் எனக்கு வழிகாட்டி; சேவாக் என் குருநாதர்.”

“கிரிக்கெட்டில் உங்கள் அடுத்த லட்சியம் என்ன?”

“ஒன் டே மேட்ச்சில் இரட்டை சதம் அடிக்க வேண்டும்.”

“எல்லோரையும் கவரும் உங்கள் அழகான முடியின் பின்னால் ஏதாவது கதை இருக்கிறதா?”

“ஒரு கதையும் இல்லை. கடந்த ஆண்டில் இருந்து சும்மாதான் முடி வளர்க்கத் தொடங்கினேன். இது வளர்ந்த நேரமோ என்னவோ, கிரிக்கெட்டில் எனக்குப் புகழ் கிடைக்கத் தொடங்கியது. சரி, இது நமக்கு ராசிதான்போலிருக்கிறது என்று அப்படியே மெயின்டெயின் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.”

“நீங்கள் ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் பால் குடிப்பதாகச் சொல்கிறார்களே?”

“யார் இந்த வதந்தியைப் பரப்பியது என்று தெரியவில்லை. எனக்கு பால் பிடிக்கும்தான். ஆனால், நான்கு லிட்டர் என்பது எல்லாம் கொஞ்சம் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பாலுக்கு மேல் குடிப்பது இல்லை. இப்போது அதுவும் இல்லை. பாலில் இருந்து மில்க் ஷேக்குக்கு மாறிவிட்டேன்.”

MS Dhoni’s Exclusive Interview

“உங்களை கல்யாணம் செய்துகொள்ள, பெண்களிடம் இருந்து அப்ளிகேஷன்கள் வந்து குவிகின்றனவே?”

“இதப் பார்றா! பால் விஷயம்போலவே இதுகூட வதந்திதான். அப்படி ஒன்றும் அப்ளிகேஷன்கள் குவிந்துவிடவில்லை. மூன்றே மூன்று பெரிய குடும்பங்களில் இருந்து மட்டும் என்னை மாப்பிள்ளை கேட்டு, என் பெற்றோரை அணுகியிருக்கிறார்கள்.”

“சரி, டென்னிஸுக்கு வருவோம். சானியா மிர்ஸா தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபடுகிறாரே?”

“பாவம், அவரை விட்டுவிடுங்கள். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கவைக்காதீர்கள். அப்போதுதான் அவரால் டென்னிஸில் சாதிக்க முடியும்!”எல்லா கேள்விகளுக்கும் சடசடவென பதில் அளித்துக்கொண்டே வந்த தோனி, கடைசியாக அந்தக் கேள்வியைக் கேட்டதும் உஷாராகி, `‘நோ கமென்ட்ஸ்!’’ என்று வாயை இறுக மூடிக்கொண்டார்.அந்தக் கேள்வி,

‘`கங்குலி, டிராவிட் இருவருடைய கேப்டன்ஷிப்புக்கும் நடுவே நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?”

– பி.எம்.சுதிர்

படங்கள்: சு.குமரேசன்

(04.12.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.