‘புதுக்கோட்டை முழுவதும் புத்தக வாசிப்பு’ – மாணவர்களோடு அமர்ந்து வாசித்த ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி இன்று (ஜூலை 7) நடைபெற்றது. இதில், மாணவிகளோடு ஆட்சியர் அமர்ந்து புத்தகம் வாசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஜூலை 29-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் 5வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட நிர்வாகத் தோடு இணைந்து இம்முறை புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. சுமார் 80 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

மேலும், மேடை நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதோடு, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கலை, இலக்கிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறந்த நூல்களுக்கு விருதும் அறிவிக்கப்பட்டுள்ன. இவற்றில் வெற்றி பெருவோர் புத்தகத் திருவிழாவில் பாராட்டப்படுவர். புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணி வரையில் புத்தக வாசிப்பு நடைபெற்றது.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளோடு அமர்ந்து ஆட்சியர் கவிதா ராமு, புத்தகம் வாசித்து, நிகழ்ச்சி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைவரும் தினசரி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

புத்தகம் வாசிக்கும்போதுதான் கல்வி, வாழ்க்கை, தொழில், பழக்க வழக்கம் என ஒவ்வொருவரும் தனக்குள் பன்முக தன்மையை உருவாக்கிக் கொள்ள முடியும். சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை தேடிப் பார்த்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அதையும், முழு ஈடுபாட்டோடு, கவனச்சிதறல் இல்லாமல் வாசிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து துறைகளின் சார்பிலும் புத்தகத் திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, முத்துநிலவன், மணவாளன், வீரமுத்து, ராஜ்குமார், முத்துக்குமார், பாலகிருஷ்ணன், ஜெயபாலன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் அங்குள்ள கூட்ட அரங்கில் ஒரு மணி நேரம் வாசித்தனர். மாவட்டத்தில் உள்ள 92 நூலகங்களிலும் வாசிப்புக்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அரசு மற்றும் தனியார் என பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் புத்தகம் வாசிக்கப்பட்டது. அனைத்து அலுவலகங்களிலும் புத்தகம் வாசிக்கப்பட்டது.

மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட ‘தமிழினி’ வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்தோர் தமிழகம் முழுவதும் அவரவர் இருந்த இடத்தில் இருந்து புத்தகம் வாசித்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாசித்தனர்.

தூசி தட்டப்பட்ட புத்தகங்கள்:

வாசிப்பு நிகழ்ச்சியின்போது பாடப்புத்தகம் அல்லாத பிற புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பீரோக்களில் பயன்பாடு இல்லாமல் ஆண்டுக் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தூசி தட்டி எடுத்து வாசிக்கப்பட்டன.

படித்ததை ஆட்சியரிடம் கூறிய மாணவிகள்:

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் வாசிக்க புத்தகம் குறித்து ஆட்சியர் கேட்டார். அப்போது, மாணவிகள் பலரும் ஆட்சியரிடம் நெருங்கி வந்து, வாசித்த புத்தகம் குறித்து மாணவிகள் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.