கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் மனித இனத்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்த நிலையில் திடீரென இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்சூரன்ஸ் கை கொடுத்தது போல் குரங்கு அம்மை நோய்க்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா? இன்சூரன்ஸ் விதிகள் என்ன சொல்கிறது? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
இந்த 7 பங்குகளில் ஏதேனும் வச்சிருக்கீங்களா.. விரைவில் சர்பிரைஸ் உண்டு?!

குரங்கு அம்மை நோய்
குரங்கு அம்மை நோய் கேரளாவில் மூன்று பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் பாதித்துள்ளது. குரங்கு அம்மை என்பது, மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், கடந்த காலத்தில் பெரியம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளுக்கு மிகவும் ஒத்த அறிகுறிகள் இதில் காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தான் குரங்கு அம்மை ஆகும். இருப்பினும், கோவிட்-19ஐப் போலவே, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவமனையில் சேர்க்கும் செலவை சந்திக்க ஒருவர் தயாராக இருக்க வேண்டும்.

குரங்கு அம்மை நோய்க்கு காப்பீடு உண்டா?
உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை பொருத்தவரையில் ஏதேனும் புதிய நோய்கள், புதிய நோய்த்தொற்றுகள் போன்றவற்றுக்கான சிகிச்சை அளிக்க காப்பீடு கொள்கை அனுமதிக்கின்றது. இந்தியாவில் குரங்கு அம்மை உள்பட எந்த ஒரு நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டு ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அது தனிநபர் உடல்நல காப்பீட்டு கொள்கையின் கீழ் பாதுகாக்கப்படும், என்று ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறுகிறார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியிருந்தால்?
இருப்பினும், பயண காப்பீட்டுக் கொள்கைகளை பொறுத்தவரை, நிலைமை ஒரே மாதிரியாக இருக்காது. வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு இந்தியாவிற்கு திரும்பிய பிறகு நோய்த்தொற்று ஏற்பட்டால் பயணக் காப்பீடு கவரேஜை வழங்காது. மேலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் சரியான காப்பீடு திட்டத்தை வாங்க வேண்டும்.

வெளிநாட்டில் தொற்று ஏற்பட்டால்?
ஒருவர் வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார்கள் என்றால், அவருக்கு அங்கு விபத்து மரணம் மற்றும் விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மட்டுமே காப்பீடு கொள்கை உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாட்டு பயணத்தில் கொரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது காப்பீடு கொள்கைகளில் சேர்க்கப்படவில்லை. அதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் சர்வதேசப் பயணத்தின் போது மருத்துவமனையில் சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும்.

சரியான காப்பீடு திட்டம்
வெளிநாட்டுப் பயணத்தின் போது குரங்கு அம்மை நோய் தாக்கப்பட்டால் அதற்கு எடுக்கப்பட்ட சிகிச்சைகள், மருத்துவச் செலவு ஆகிய அம்சத்துடன் கூடிய சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்து அதற்கேற்ற காப்பீடு தொகையை செலுத்தி கொள்வது நல்லது.

பயணக் காப்பீடு
சுருக்கமாகச் சொல்வதானால், நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், வெளிநாடுகளில் மருத்துவக் காப்பீட்டை வழங்கும் பயணக்காப்பீட்டு கொள்கையை வாங்குவது மிகவும் முக்கியமானதாகிறது.
Monkeypox Virus: Will there be insurance coverage in India and while travelling abroad?
Monkeypox Virus: Will there be insurance coverage in India and while travelling abroad? | குரங்கு அம்மை நோய்க்கு காப்பீடு உண்டா? என்ன சொல்கிறது இன்சூரன்ஸ் விதிகள்?