தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை திட்டம் விரைவில் நிறுத்தம்: தங்கமணி கணிப்பு

நாமக்கல்: “இலவச வேட்டி, சேலை திட்டம் நிறுத்தப்படவுள்ளது. இதனால் லட்சணக்கான தொழிலாளர்கள் வாழ்வதாரம் இழக்கப் போகின்றனர்” என நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.

நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தலைமை வகித்துப் பேசியது: ”கடந்த 10 ஆண்டு காலம் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. ஆனால், ஆட்சியேற்ற பத்தே நாளில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது. அதனால்தான் மின்சாரத் துறை அமைச்சர் நிர்வாகத் திறனற்ற அமைச்சர் என நான் ஏற்கெனவே சொன்னேன்.

தற்போது அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு கடிதம் எழுதியது என சொல்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலம் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தேன். எத்தனை முறை மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கும். அதற்கெல்லாம் நாங்கள் செவி சாய்த்தோமா. மின் கட்டண உயர்வு என்பது சாதாரணமாக இல்லை. 12 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை மின் கட்டணம் உயரப் போகிறது.

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமெனில் அதற்கென உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆணையம் அனுமதியளித்தால்தான் மின் கட்டணத்தை உயர்த்த முடியும். அது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். ஆனால், மின்சாரத் துறை அமைச்சர், ஆணையத்திற்கு ஆணையிடுகிறார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு என்றால் எங்கு இருக்கிறது என்ற நிலைமை உள்ளது. நாள்தோறும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் கதவை உடைத்து பன்னீர்செல்வம் ஆட்கள் உள்ளே புகுந்து அங்குள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்தினர். திமுகவின் துணையில்லாமல் இதை செய்ய முடியுமா? தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு இரண்டு முறை காவல் துறையினருக்கு கடிதம் கொடுத்தும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தருவர். தமிழகத்தில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும்.

விளம்பரத்திற்காக அரசை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி வர வேண்டுமென ஆட்சி நடத்துகிறீர்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தனியாரிடம் இருந்து ரூ.4-க்கு கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தை தற்போது ரூ.20-க்கு கொள்முதல் செய்கின்றனர். எந்த மாநிலத்திலும் மின் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக இருக்க முடியாது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் இலவச வேட்டி சேலை திட்டம் நிறுத்தப்படவுள்ளது. இதனால் லட்சணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்கப் போகின்றனர்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா, பரமத்தி வேலூர் எம்எல்ஏ எஸ். சேகர், முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் உள்பட கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.