நண்பரின் மனைவியுடன்தொழிலதிபருக்கு காதல்?| Dinamalar

நியூயார்க் : ‘கூகுள்’ துணை நிறுவனர் செர்ஜி பிரின்னின் மனைவியுடன், பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு ரகசிய உறவு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதை எலன் மஸ்க் மறுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க், பல்வேறு புதிய முயற்சிகளுக்கு சொந்தக்காரர். அதுபோலவே, பல சர்ச்சைகளும் இவரைச் சுற்றி நிகழ்ந்துள்ளன.பிரபல பாடகி கிரிம்ஸ் உடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், தன்னுடைய ‘நியூராலிங்க்’ நிறுவனத்தில் பணியாற்றும் ஷிவோன் ஜிலிஸ் என்ற பெண்ணுடன் மஸ்க்குக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் செய்தி வெளியானது.இதற்கிடையே, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தை விலைக்கு வாங்குவதாகக் கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதை கைவிட்டார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனரும், பெரும் பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின்னின் மனைவியுடன் மஸ்க்குக்கு ரகசிய உறவு உள்ளதாக செய்திகள் வெளியாகின.ஆனால், இதை மஸ்க் மறுத்துள்ளார். ‘நானும் செர்ஜியும் நீண்ட கால நண்பர்கள். அவருடைய மனைவி நிகோலை, இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே, கூட்டங்களில் சந்தித்துள்ளேன்’ என, சமூக வலைதளப் பதிவில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

எலன் மஸ்க் மற்றும் செர்ஜி பிரின் இடையே நீண்ட காலமாக நட்பு உள்ளது. கடந்தாண்டு டிச.,ல் இருந்து, மனைவி நிகோல் ஷானஹானை பிரிந்து வாழும் செர்ஜி பிரின், விவாகரத்து கேட்டு, இந்தாண்டு ஜன.,யில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.