கான்பூர்: ‘நாட்டின் நலனைவிட எதிர்க்கட்சிகளுக்கு அவர்களின் அரசியல் ஆதாயமே முக்கியம்’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். டாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் சுமூகமாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில், உபி மாநிலம் கான்பூர் அருகே உள்ள மெகர்பன் சிங் கா பூர்வா கிராமத்தில் முன்னாள் எம்பியும், பிற்பட்டோர் மற்றும் விவசாயிகள் தலைவருமான மறைந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10ம் ஆண்டு நினைவு தினம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசுகையில், ‘‘ஒன்றிய அரசு கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் பல நேரங்களில் முடக்கி உள்ளன. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது எடுத்த முடிவுகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், பாஜ அரசு கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களுக்கு அவர்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர். திட்டங்களை அமல்படுத்தினால் அவர்கள் எதிர்க்கின்றனர். இதை நாட்டு மக்கள் விரும்பவில்லை. சமீபகாலமாக சமூகம் மற்றும் நாட்டு நலனை விட தங்களது அரசியல் அல்லது சிந்தாந்த நலனே உயர்ந்தது என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். சுதந்திரத்துக்கு பிறகு முதன்முறையாக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் நாட்டை வழிநடத்தி செல்ல உள்ளார்’’ என்று பெருமிதம் தெரிவித்தார்.
