`நான் பெரிய ரவுடி தெரியும்ல?’- நிலத்தகராறில் பெண்ணை மிரட்டிய ரவுடிக்கு காவல்துறை வலைவீச்சு

சென்னையில் தொலைபேசி வழியாக ஒரு குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி ராம்நகரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 62). இவர் சேலத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடம் மலேசியாவை சேர்ந்த செல்லப்பா என்பவருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது. இரு தரப்பும் அவரவர் தங்களது இடம் என கூறிக் கொள்ளும் நிலையில், இடம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் செல்லப்பா, பிரபல ரவுடி சீசிங் ராஜாவை அணுகி தியாகராஜனை இடத்தை விட்டு விரட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
image
இதைத்தொடர்ந்து சீசிங் ராஜாவும் தனது கூட்டாளிகள் மூவரை தியாகராஜன் வீட்டிற்கே அனுப்பி வைத்திருக்கிறார். வீட்டில் தியாகராஜன் இல்லாதிருந்திருக்கிறார். அவரது மகள் மட்டும் இருந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு சென்ற மூவர், தியாகராஜன் மகளிடம் சீசிங் ராஜாவை செல்ஃபோன் வழியாக பேசிவைத்துள்ளனர்.
செல்ஃபோனில் சீசிங் ராஜா, `சேலத்தில் உள்ள இடத்தில் இருந்து உங்க அப்பாவை ஒதுங்கிவிட சொல்லு. இல்லையென்றால், நான் பெரிய ரவுடி. குடும்பத்தோடு உங்களை கொலை செய்து புதைத்து விடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன அப்பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வேளச்சேரி போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.
image
சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி சீசிங் ராஜா, செல்லப்பா, உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், வில்லிவாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கிரிஸ்டோபர் (வயது 34), அம்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் தேவ பிரபு (வயது 31) ஆகிய இருவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான செல்லப்பா, ரவுடி சீசிங் ராஜா உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.