லுடியன்ஸ் பங்களா… ரூ. 2.5 லட்சம் ஓய்வூதியம் – ஓய்வுக்கு பின் ராம்நாத் கோவிந்த் பெறும் சலுகைகள்

புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவுற்றது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராம்நாத் கோவிந்த் பெறவுள்ள சலுகைகள் தான் இந்த கட்டுரை.

குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதுவே ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு, மாதம் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் வாழ்நாள் முழுவதும் இந்த தொகையை பெற முடியும். குடியரசுத் தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1951 இன் படி, ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் இலவச மருத்துவ சிகிச்சைகள் பெறலாம். மேலும் இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் விமானம் அல்லது ரயில் உள்ளது எந்த போக்குவரத்தில் மிக உயர்ந்த வகுப்பில் பயணம் செய்ய உரிமை உண்டு.

குடியரசுத் தலைவராக இருந்தபோது ராஷ்டிரபதி பவனில் தங்கியிருந்த ராம்நாத், இப்போது அங்கிருந்து வெளியேறி டெல்லி ராஜ்பத் பகுதியில் உள்ள அரசாங்க குடியிருப்பான பங்களா ஒன்றில் குடிபெயர்ந்துள்ளார். ராஷ்டிரபதி பவனை ஒட்டி அரசின் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் லுடியன்ஸ் வளாகத்தில் அவருக்காக அலங்காரத்துடன் கூடிய ஆடம்பரமான பங்களாவாக அது தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கேயே தனது மீத வாழக்கையை ராம்நாத் கோவிந்த் கழிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

12-ஜன்பத் என்ற முகவரியில் அவருக்கான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் லோக் ஜனசக்தி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தங்கியிருந்தார். அவர் இறந்த பிறகு அவரது மகன் சிராக் பஸ்வான் கடந்த மார்ச் மாதம்தான் அந்த பங்களாவை காலி செய்திருந்தார். 10 ஜன்பத் முகவரியில் வசிப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும். இனி ராம்நாத் கோவிந்த்தும் சோனியா காந்தியும் அண்டை வீட்டராக இருக்க போகின்றனர்.

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவருக்கு ஒரு தனிச் செயலாளர், கூடுதல் தனிச் செயலாளர், ஒரு தனி உதவியாளர், இரண்டு பியூன்கள் வைத்துக்கொள்ள உரிமை உண்டு. அதேபோல் அலுவலக செலவுகளுக்காக ரூ.1 லட்சம் ஆண்டுதோறும் ராம்நாத் கோவிந்திற்கு வழங்கப்படும். இதை தவிர, ராம்நாத் கோவிந்த் தனது பங்களாவில் இரண்டு தொலைபேசிகள்இணையம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புடன் வைத்துக்கொள்ள முடியும். அதுபோக தேசிய ரோமிங் வசதியுடன் ஒரு மொபைல் போன், மற்றும் ஒரு கார் அரசின் செலவில் வைத்துக்கொள்ள உரிமை உண்டு. இந்த சலுகைகளை ராம்நாத் கோவிந்த் இனி பெறவுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.