தேனியில் அரசு பேருந்தை லுங்கி அணிந்தவாறு ஆட்டோ ஓட்டுனரொருவர் இயக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேனியில் பழனிச்செட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பனிமனையில் இருந்து, தேனி வீரபாண்டியில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த ஜூலை 11ம் தேதி தேனி டூ சட்டக்கல்லூரி அரசு பேருந்தை அரசு ஓட்டுநர் பாண்டி விஸ்வநாத் என்பவர் இயக்கச் சென்றுள்ளார்.
பாண்டி விஸ்வநாத் ஓட்டிக்கொண்டிருந்த அப்பேருந்தை, வழியில் ஏறிய ஆட்டோ ஓட்டுநரொருவர் தான் இயக்குவதாக தெரிவித்திருக்கிறார். இதை பாண்டி விஸ்வநாத்தும் அனுமதித்துள்ளார். இதைத்தொடர்ந்து பாண்டி விஸ்வாநாத்துக்கு பதிலாக ஆட்டோ ஓட்டுநர் சரவணன் 5க்கும் மேற்பட்ட கிலோமீட்டருக்கு அப்பேருந்தை இயக்கியுள்ளார். அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து, ஓட்டுநர் பாண்டி விஸ்வநாத் மகிழ்ந்திருக்கிறார். அதை அவரே தன் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுனரான சரவணன், லுங்கி அணிந்தவாறு பேருந்து இயக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டோம். அதற்கு அவர், `பேருந்து ஓட்டுனரான பாண்டி விஸ்வநாத்திடம் விசாரணை நடத்தியதில், பேருந்து இயக்கிக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது நண்பரான ஆட்டோ ஓட்டுனர் சரவணனை அரசு பேருந்து இயக்கி சொல்லியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு என்றால் ஏதாவது மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கி சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், அரசு பேருந்தை பொறுப்பற்ற முறையில் வேறு தனி நபரை இயக்க அனுமதிதத்திருக்கிறார். இதனால் அந்த அரசு பேருந்து பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
