’ஆர்டர்லி’ புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி தொடர்பாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்ப பெற வேண்டும். தனியார் வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற கூலிங் பிலிம் ஒட்டக் கூடாது’ என்று ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, “தமிழகத்தில் காவல் துறையில் உள்ள ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

அதற்கு நீதிபதி, “பணியைத் தொடங்கினால் மட்டும் போதாது. அனைத்து ஆர்டர்லிகளையும் ஒரே உத்தரவில் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணிகள் விதிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 1979-ம் ஆண்டிலேயே ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆர்டர்லி முறை தொடர்கிறது. ஆர்டர்லி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும். திருநெல்வேலியில் ஒரு காவல் துறை உயர் அதிகாரிக்கு 39 ஆர்டர்லிகள் பணி செய்வதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

நாயைப் பராமரிக்க காவலரா?

உங்கள் வீட்டில் வளர்க்கும் நாயைப் பராமரிக்க, பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா? உங்கள் நாயை நீங்களே பராமரிக்க வேண்டியதுதானே? காவல் துறைஅரசின் முழு கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிய ஆபத்தாகிவிடும்” என்று எச்சரித்தார்.

அத்துடன், உயர் நீதிமன்றப் பணியாளர் ஒருவர், தனது வாகனத்தில் உயர் நீதிமன்றம் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக போலீஸ்காரர் ஒருவர் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அதை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்தெரிவித்தார்.

ஆங்கிலேய காலனி மனநிலை

“முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்” என்று கருத்து தெரிவித்த நீதிபதி, பணியில் இருக்கும் காவல் துறை உயர் அதிகாரிகளைவிட, ஓய்வுபெற்ற அதிகாரிகள்தான் அதிக சலுகை அனுபவிக்கின்றனர். இது ஆபத்தானது. பல மாநிலங்களில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இது உயர் அதிகாரிகளின் ஆங்கிலேய காலனி மனநிலையைத்தான் எதிரொலிக்கிறது.

எனவே, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, தமிழக அரசு 2 வாரத்தில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். காவல் துறை அதிகாரிகள், தங்களது வீட்டில் வைத்துள்ள ஆர்டர்லிகளை தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.

ஆர்டர்லி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆக.12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.