இலங்கை மாஜி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப திட்டம்| Dinamalar

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரிலிருந்து விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் அண்டை நாடான இலங்கை விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இது, 9ம் தேதி தீவிரமடைந்தது.

போராட்டக்காரர்கள், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். கோத்தபய குடும்பத்துடன் மாலத் தீவிற்கு தப்பி, அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார். இதற்கிடையே, அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று உள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து அமைச்சர் பந்துலா குணவர்த்தனே கூறுகையில் ”கோத்தபய ராஜபக்சே தலைமறைவாக உள்ளதாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. அவர், விரைவில் நாடு திரும்ப வாய்ப்பு உள்ளது,” என்றார்.

எரிபொருள் கட்டுப்பாடு

இலங்கை அரசு, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், அடுத்த, 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனைக்கு ‘கியூ ஆர் கோட் ஸ்கேன்’ செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆக., 1 முதல் இதன் வாயிலாகவே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனநாயக முறையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவும், பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, மோடி தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை இந்திய துாதர் கோபால் பக்லே சந்தித்து, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.