திமுக கட்சித் தலைமை மீது அதிருப்தி – உறுப்பினர் அட்டையை ஒப்படைப்பதாக அறிவித்த நிர்வாகிகள்

பட்டுக்கோட்டையில் திமுக கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கட்சி உறுப்பினர் அட்டையை ஒப்படைப்பதாக 63 ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபனை ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 14 திமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் 49 ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட 63 திமுக பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் அட்டைகளை ஒப்படைத்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கூறி, பேரணியாகச் சென்று திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பேரணியாக வருவதை அறிந்து எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் இன்று பூட்டிக்கிடந்தது.
image
வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பத்திரிகையாளரிடம் கூறும்பொழுது, ’’கடந்த கஜா புயல் மற்றும் கொரோனா பேரிடர் காலங்களில் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களை கையில் வைத்துக்கொண்டு வீடுவீடாக காய்கறிகளும் உணவுப் பொருட்களும் கொடுத்தது மட்டுமல்லாமல், கோவிட் தடுப்பூசி போடுவதற்கு அனைத்து மக்களையும் திரட்டிய வரையில் மக்களோடு மக்களாக நின்று களப்பணி ஆற்றியவர் வடக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன். தற்பொழுது அவரிடமிருந்து அந்த பொறுப்பை பறிக்கும் வகையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்டவர்கள் செயல்படுகின்றனர். உதாரணமாக எங்கள் பகுதியில் உள்ள பிரதிநிதிகளைக் கூட கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
image
எனவே எங்களின் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு செல்கின்றோம். அங்கு சென்று 63 பொறுப்பாளர்களின் கட்சி அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து அடிப்படை உறுப்பினராக உள்ளதையும் ராஜினாமா செய்ய உள்ளோம்’’ என்று கூறினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.