“வேலையும் கெடைக்கல..பணமும் திருப்பி தரல”.. கால்நடை துறை அதிகாரியின் ஆபிஸ் முன்பு போராட்டம்

கால்நடை துறையில் வேலை வாங்கித் தருவதாக 3 பேரிடம் தலா 50 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றியதாக கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் 5 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் தற்போது குடியாத்தம் கல்லூர் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன், இவரது சகோதரர் பிரபுதேவா மற்றும் ராகவேந்திரன் ஆகிய மூவரிடமும் கால்நடை துறையில் பணியிடம் காலியாக இருப்பதாகவும், 4 லட்சம் கொடுத்தால் டாக்டர். ரமேஷ் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, 3 பேரிடமிருந்தும் தலா ரூ.50 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.
image
ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை என்றும், பணத்தையும் திரும்ப தரவில்லை என்றும் கூறி சிவசந்திரன் உட்பட 5 பேர் இன்று வேலூரில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
image
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் மற்றும் கால்நடை துறை உதவி இயக்குனர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில், கால்நடை மருத்துவமனையின் உதவியாளர் சாந்தி மீது புகார் அளித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.