சென்னையில் அம்மா உணவகம் மூலம் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி: அரசிடம் மாநகராட்சி கோரிக்கை

சென்னை: சென்னையில் அம்மா உணவகம் மூலம் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது.

தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு, ஆண்டுக்கு, 1.66 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில், தொடக்க பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை, அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்கலாம் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணகவங்கள் உள்ளன. இந்த உணவகங்களால், ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் மாநகராட்சிக்கு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. மேலும், அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. போதிய அளவில், பணியாளர்களும் உள்ளனர். அவற்றை முழுமையாக பயன்படுத்த மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

எனவே, அரசு கொண்டு வரும் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, அம்மா உணவகத்துடன் சேர்த்து செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, பள்ளி அருகாமையில் உள்ள, அம்மா உணவகங்களை தேர்ந்தெடுத்து அங்கு, சிற்றுண்டி தயாரித்து பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். இதற்கு, தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அரசு அனுமதிக்கும்பட்சத்தில், காலை சிற்றுண்டி, அம்மா உணவகத்தில் தயாரித்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.