மோடி வருகையால் நாளை சென்னை போக்குவரத்தில் மாற்றம்

சென்னை

நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

நாளை 28.07.2022 மாலை 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர், தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

ஆகவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 21.00 மணிவரையில் ராஜா முத்தையா சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராசா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய ரயில் நிலையத்திற்கு நாளை வரவேண்டிய பொதுமக்கள் அவர்களதுப் பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.