ஹிந்து பிரமுகர்களை கொல்ல சதி அம்பலம்| Dinamalar

பெங்களூரு, : கைது செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த இரண்டு பயங்கரவாதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்து பிரமுகர்கள் கொல்ல சதி திட்டம் தீட்டியதும் அம்பலமாகியுள்ளது.பெங்களூரு திலக் நகரில் இரண்டு நாட்களுக்கு முன் லஷ்கர் – இ – தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி அக்தர் உசேன், 23, என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த ஜுபா, 23, என்பவர், தமிழகத்தின் சேலத்தில் நேற்று முன்தினம் பிடிபட்டார். இருவரிடமும், தேசிய புலனாய்வு மற்றும் பெங்களூரு சி.சி.பி., போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

கொலை செய்ய உத்தரவு
இருவரையும் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பால், ஒரே பயங்கரவாதி நியமித்துள்ளார். அந்த பயங்கரவாதி அனுப்பிய ஆவணங்களில், ‘ஜிஹாத்துக்காக உயிர் கொடுக்க வேண்டும்.உலகில், ‘ஷரியத்’ சட்டம் அமல்படுத்த போராட வேண்டும், கொலை செய்ய வேண்டும்’ போன்றவை இருந்தது.ஜுபாவின் முகநுால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலை தளங்களை ஆய்வு செய்த போது, தான் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பில் இணைய தயாராக இருப்பதாக பதில் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.மேலும், ஒருமுறை அனுப்பியதை ஒரே பார்க்கும், ‘ஸ்னாப்சாட்’ எனும், சமூக வலைதளம் மூலம், பல்வேறு விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன. அது குறித்து தடயவியல் ஆய்வக அதிகாரிகள் மொபைல் போனை ஆய்வு செய்கின்றனர்.

15 நாளில் ஆப்கானிஸ்தான்
இவர்கள் இருவரும் அடுத்த, 15 நாட்களில் காஷ்மீர் சென்று, அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு பயணித்து பயங்கரவாத செயலில் ஈடுபட தயாராக இருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.இருவருக்கும் ஒரே எண் மூலம் அடிக்கடி போன் வந்துள்ளது. அந்த எண் யாருடையது , எங்கிருந்து வந்தது, யார் பேசியது, அவரின் உத்தேசம் என்ன என்று பல கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.ஒவ்வொருவரிடமும் தலா இரண்டு மொபைல் போன்கள் இருந்துள்ளன. ஒன்றை குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலக ஊழியர்களுக்கும்; மற்றொன்று பயங்கரவாதிகளுடன் பேசவும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

குண்டு வெடிக்க திட்டம்
அக்தர் உசேன், 2015ல் பெங்களூரு வந்து எட்டு மாதங்களில் பெங்களூரின் நான்கு இடங்களில் மாறி மாறி பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் கெமிக்கல் தொழிற்சாலையிலும், அதன் பின் ஆயத்த ஆடை ஆலையிலும், மேலும் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்துள்ளார்.அதன்பின், சொந்த ஊரான அசாமிற்கு சென்று பயங்கரவாத அமைப்பில் ஈடுபடுவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கடந்தாண்டு பெங்களூரு வந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு ஜூனில் எழுதிய கடிதம் ஒன்று பகிரங்கமாகியுள்ளது.அதில், ஹிந்து பிரமுகர்களை கொல்ல சதி தீட்டியது அம்பலமாகியுள்ளது. இதன்படி, வெடிகுண்டு வெடிக்க வைக்கவும் நாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், தேசிய புலனாய்வு பிரிவும், கர்நாடக போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.