இலங்கை செல்கிறது சீன உளவு கப்பல்! தமிழகத்துக்கு மத்திய அரசு உஷார் தகவல்| Dinamalar

புதுடில்லி: சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் செல்கிறது. நம் நாட்டின் கடலோர மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை உளவு பார்ப்பதற்காக இந்தக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, உஷாராக இருக்கும்படி இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் அரசியல் குழப்பமும் அங்கு நிலவி வருகிறது. அந்நாட்டின் தெற்கே உள்ள அம்பன்தோட்டாவில், நம் மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியுடன் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.

ரகசிய அறிக்கை

சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பன்தோட்டாவுக்கு, ஆக., 11ல் செல்கிறது. ஆக., 17 வரை அங்கு முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் இந்தப் பயணம் தொடர்பாக, ‘ரா’ எனப்படும் நம் நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும்.

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

சந்தேகம்

அரசியல் ரீதியில், தென் மாநிலங்களை ஆளும் அரசுகள், மத்திய அரசுக்கு எதிராக உள்ளன. அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி, இந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து மத்திய அரசு தகவல்களை பரிமாறி வருகிறது.சீன கப்பலின் இந்தப் பயணத்தின் போது, இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள இளைஞர்களை, மத்திய அரசுக்கு எதிராக துாண்டிவிடுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, மத்திய அரசுக்கு எதிராக இயங்கி வரும் அமைப்புகள், கட்சிகளை துாண்டி விட சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இலங்கையில் அரசியல் குழப்பம் மற்றும் நிதி நெருக்கடி நிலவும் நேரத்தில், சீன கப்பல் அங்கு பயணம் மேற்கொள்வதும் சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது. இலங்கையில் உள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் ராணுவம், சீனாவுக்கு ஆதரவாக உள்ளனவா என்ற கேள்வியும் மத்திய அரசுக்கு ஏற்பட்டுஉள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது. இந்த நேரத்தில் சீன கப்பல் இலங்கை செல்வது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் சீனாவின் முயற்சியை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.