தமிழக மாணவர்களுக்கு சூடான பொங்கல், கிச்சடியுடன் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு சூடான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.33.56 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

ஏழை, எளிய சமூக குழந்தைகளின் காலடிகள் கல்விச்சாலையை எட்ட முடியவில்லை என்பதை கருத்தில்கொண்டு, ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே பள்ளியில் உணவு அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளது. கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராயரால் நாட்டிலேயே முதல்முறையாக மதிய உணவு திட்டம் அறிமுகம் செய்யப் பட்டது.

அதன்பின், 1957-ல் முன்னாள் முதல்வர் காமராஜரால் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அறிவிப்பின்படி, 1982 ஜூலையில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், 1989-ல் சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். தற்போது வாரம் 5 முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிக்கையில், 2006-2016 காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் 13 முதல் 32 சதவீதம் வரை உயர்ந்திருப்பதற்கு சத்துணவு திட்டம் முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 3-ல் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாகவோ அல்லது அவர்கள் வயதுக்கேற்ற உயரத்தை அடையாமலோ இருப்பதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடே ஆகும்.

அதேபோல, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் தற்போதும் வயதுக்கேற்ற உயரத்தை அடையாமல் அவர்களின் வளர்ச்சி தடைபடுவது தெரியவருகிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாட்டால் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது.

இதை கருத்தில்கொண்டு கடந்த மே 7-ம் தேதி சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகர, கிராமப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகின்றனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது. பள்ளிகள் மிக தொலைவாக இருப்பது மட்டுமின்றி, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதை மனதில் வைத்து இந்த திட்டத்தை தீட்டியுள்ளோம். முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். படிப்படியாக இத்திட்டம் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சமூக நல இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள், மலைப்பகுதியில் முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடியில் செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை கவனமாக பரிசீலித்த அரசு, 1,545 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டில் முதல்கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. கூடுதல் செலவு ஏற்பட்டால் அதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். நாட்டிலேயே முன்னோடியாக அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம், ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும். திட்டத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன உணவு?

காலை சிற்றுண்டியை பொறுத்தவரை உப்புமா, கிச்சடி, பொங்கல் ஆகியவை வழங்கப்பட உள்ளது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள கிச்சடி, கோதுமை கிச்சடி இவற்றில் ஏதாவது ஒன்று வழங்கப்படும். வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும்.

புதன்கிழமை மட்டும் ரவா பொங்கல் அல்லது வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும். சமைத்தபின் 150 முதல் 200 கிராம் உணவு, 60 மிலி காய்கறி சாம்பார் வழங்கப்படும். வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.