முதல்வரின் பட்டு வேட்டி, சட்டை முதல் பிரதமரின் தமிழ் வணக்கம் வரை: செஸ் ஒலிம்பியாட் விழா ஹைலைட்ஸ்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். இந்த விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரையிலான சில முக்கிய நிகழ்வுகளின் ‘ஹைலைட்’ தொகுப்பு:

> தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கிற்கு 87 பேருந்துகளில் பிற்பகல் 3 மணியிலிருந்து வீரர், வீரங்கனைகள் அழைத்து வரப்பட்டனர். வீரர்களை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு இடங்களில், தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

> செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டரங்கில் விவிஐபிகள், முக்கிய விருந்தினர்கள், வீரர் வீராங்கனைகள் ஆகியோர் தனித்தனி நுழைவு வாயில்களின் வழியே அனுமதிக்கப்பட்டனர்.

> தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதைத் தொடர்ந்து சென்னையில் 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

> தொடக்க விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டரங்கம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடக்க விழா நடைபெற்ற மேடை சதுரங்க காய்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

> முக்கிய விருந்தினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு சிறப்பு கேலரிகள் அமைப்பட்டிருந்தது.

> மாலை 4.30 மணிக்கு உள்விளையாட்டரங்கில் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

> முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து விழாவில் கலந்துகொண்டார்.

> தொடக்க நிகழ்வில் மணலில் செஸ் தொடர்பான ஓவியங்களை சர்வம் படேல் வரைந்து பார்வையாளர்களை அசத்தினார்.

> இந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா, கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

> 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட வரவேற்பு பாடல் (Welcome Anthem) திரையிடப்பட்டது. இதற்காக விழா மேடையில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது.

> செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றுள்ள 186 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

> போட்டிகளில் பங்கேற்கு நாடுகளின் பெயர் தாங்கிய பதாகைகளை தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் ஏந்திவந்தனர்.

> கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியின் பின்னணியில் பிரபல இந்திய திரையிசைப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

> நாம் அனைவரும் ஒன்று என்ற மையக்கருத்துடன் கூடிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

> கதக், மணிபூரி, ஹாட்ரியா, ஒடிசி, குச்சிப்புடி, மோகினி, கதகளி மற்றும் பரத நாட்டியம் உள்ளிட்ட இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்களின் அரங்கேற்றம் இடம்பெற்றது.

> பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் நாட்டுப்பண் பாடல் இசைக்கப்பட்டது.

> கண்களைக் கட்டிக்கொண்டு லிடியன் நாதஸ்வரம் பியானோ இசைத்தார்.

> பிரதமர் மோடி மாலை 5.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

> விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் வரவேற்றனர்.

> தமிழக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பிரதமர் மோடியை வரவேற்றார்.

> சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

> இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

> பின்னர் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி கார் மூலம் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கத்திறகு சென்றார்.

> சிவானந்தா சாலை, பல்லவன் இல்லம், சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை வழியாக நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

> பிரதமர் நரேந்திர மோடி சரியாக மாலை 6.20 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். பார்வையாளர்களைப் பார்த்து பிரதமர் மோடி கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

> பிரதமர் மோடி சதுரங்க கரையுடன் கூடிய வேட்டி அணிந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

> மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் வோர்கோவிச் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

> விழாவின் தொடக்கமாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டன.

> விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்றார்.

> பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடிவிலான நினைவுப் பரிசு வழங்கினார்.

> தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழின் பெருமைகளை விளக்கும் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் கமல் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

> லேசர் விளக்குகள் மின்னொளியில் எஞ்சாயி எஞ்சாமி பாடலுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

> விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கிய பிரதமர் மோடி சமூகநீதியின் காவலராக வந்துள்ளார்” என்று கூறினார்.

> அவரைத் தொடர்ந்து பேசிய சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் வோர்கோவிச், “ஒவ்வொரு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்” என்றார்.

> பின்னர் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இந்தியாவில் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், பிரதமர் மோடி விளையாட்டுத்துறைக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.

> 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

> ஜோதியைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

> முதல்வர் ஸ்டாலின் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தாவிடம் வழங்கினார். அவர்கள் 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினா்.

> பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.. அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு இந்தியாவின் செஸ் தலைநகராக இருப்பது பெருமையளிக்கிறது” என்று அவர் கூறினார்.

> இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

> “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வோளாண்மை செய்தற் பொருட்டு” என்ற விருந்தோம்பல் தொடர்பான திருக்குறளை குறிப்பிட்டு பேசினார்.

> தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், சதுரங்கத்திற்கும் தமிழகத்திற்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்புள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

> நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுடன் கைகுலுக்கி விடைபெற்றார்.

> செஸ் ஒலிம்பியா தொடக்க விழா நிகழ்ச்சியை இங்கே காணலாம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.