புதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த 5 ஆண்டுகளில் விளம்பரத்துக்கு ரூ.3,339 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில் தெரிவித்தார். விளம்பரத்துக்காக ஒன்றிய அரசு செலவிட்ட தொகை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:ஒன்றிய அரசு விளம்பரங்களுக்காக கடந்த 2017ம் ஆண்டு முதல் நடப்பு நிதியாண்டின் ஜூலை 12ம் தேதி வரை, கடந்த 5 ஆண்டுகளில் நாளிதழ்களில் ரூ.1,756.48 கோடி, தொலைக்காட்சிகளில் ரூ.1,583.01 கோடி என மொத்தம் ரூ.3,339.49 கோடி செலவிட்டுள்ளது. இந்த செலவுகள் ஒன்றிய தகவல் ஆணையத்தின் மூலம் செலவிடப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், ஒன்றிய அரசின் எந்தவொரு அமைச்சகமோ அல்லது துறையோ வெளிநாட்டு ஊடகங்களில் எந்த விளம்பரமும் வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
