தருமபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள முத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தொடர்ச்சியாக விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் சிறிய தொகையைக் கட்டி விளையாடத் தொடங்கியவர், அந்த விளையாட்டுக்கு அடிமையாகி கடன் வாங்கி… விட்ட தொகையை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், தனது வீட்டை விற்பதற்காகப் பெற்ற முன்பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்திருக்கிறார். இப்படி சுமார் 15 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியிலும், கேரளா லாட்டரியில் 3 லட்சம் ரூபாய் வரையும் பிரபு இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சோகத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துவிட்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமீபத்தில்கூட, கோவையில் பாதுகாப்புப் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 லட்சம் ரூபாய் இழந்தது தெரியவந்தது.