மிக் 21 ரக போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – இரண்டு விமானிகள் பரிதாப பலி

ராஜஸ்தானில் மிக் 21 ரக போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டார்லாய் கிராமத்தில் இந்திய விமானப் படை தளம் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விமானப் பயிற்சிகள் நடைபெறும்.
அந்த வகையில், நேற்று இரவு மிக் 21 ரக போர் விமானம் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதில் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்நிலையில், இரவு 9.10 மணியளவில் பார்மர் அருகே சென்ற போது, திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்கிருந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
image
ராஜ்நாத் சிங் இரங்கல்
இதனிடையே, விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானிகளின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தார். மேலும், இந்த விபத்து குறித்து விமானப் படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரியிடமும் ராஜ்நாத் சிங் பேசினார்.
தொடரும் மிக் 21 விபத்து
மிக் 21 ரக விமானங்கள் சோவியத் யூனியன் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். ஒற்றை இன்ஜினுடன் கூடிய இந்த போர் விமானங்கள் தான், இந்திய விமானப் படையில் இருக்கும் பழமையான விமானங்கள் ஆகும். சமீபகாலமாக மிக் 21 ரக போர் விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.