கொல்கத்தா: ஆசிரியர் நியமன ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழ் நடிகை அர்பிதா முகர்ஜியிடம் இதுவரை ரூ.53.21 கோடி பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நாக்தலா பகுதியில் வசிக்கும் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அதேநேரத்தில் பார்த்தாவின் நெருங்கிய உதவியாளரும் தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.21.9 கோடி பணம், தங்க நகைகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியையும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியையும் கடந்த 23ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் ரூ.27.9 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கட்டுகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், 20 செல்போன்கள் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்து 5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம் ரூ. 53.21 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்காலி, ஒடியா, தமிழ் படங்களில் நடித்த அர்பிதா, கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள திவான்பாடாவில் சாதாரண வீட்டில் வசித்து வந்தார். ஆனால் இன்று தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஆடம்பரமான பல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த அர்பிதா, மாடல் அழகி, நடிகை, திரைப்பட தயாரிப்பாளர் என்று தன்னை உயர்த்திக் கொண்டார். சாதாரண நெயில் (நகங்கள்) பாலிஷ் ஆர்ட்டிஸ்ட்டாக வாழ்க்கை தொடங்கிய இவர், தற்போது மூன்று நெயில் ஆர்ட் ஷோரூம்களை நடத்தி வருகிறார். 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் துர்கா பூஜை கமிட்டியின் முக்கிய முகமாக அர்பிதா இருந்தார். இவ்வாறாக தன்னை பிரபலபடுத்திக் கொண்ட அர்பிதா, கொல்கத்தாவில் துர்கா பூஜை குழுவை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். அப்போது அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜியுடன் நட்பு ஏற்பட்டது. அப்போதிருந்தே அமைச்சரின் நெருக்கமான உதவியாளராக வலம் வந்தார். அனைத்து கொடுக்கல், வாங்கல் வேலைகளையும் அர்பிதா மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் – நடிகைக்கு இடையிலான உறவால், மேற்குவங்க மாநில மம்தா அரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. அதனால் பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்தது மட்டுமின்றி, அவரை கட்சியில் இருந்தும் மம்தா நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
