ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏக்களுடன் நட்பு ஹாவாலா பணத்தில் சூதாட்டம் நடத்திய தொழிலதிபர் வீட்டில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை: மலைப்பாம்பு உள்ளிட்ட அரிய வன உயிரினங்கள் சிக்கின

திருமலை: ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுடன் நட்பு வைத்து கொண்டு ஹவாலா பணத்தில் சூதாட்டம் நடத்திய தொழிலதிபர் வீட்டில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், மலைப்பாம்பு உள்ளிட்ட அரிய வன உயிரினங்கள் கண்டெடுக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், மகபூப் நகரை சேர்ந்தவர் சிக்கோட்டிபிரவீன். இவர் ஆந்திரா,  தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,  தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். தொழிலதிபரான சிக்கோட்டிபிரவீன் வளர்ப்பு பிராணிகள் மீது பெரும் காதல் கொண்டவர். தனக்கு நண்பர்களாக இருக்கும் முக்கிய பிரமுகர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கேசினோ கிளப் மூலம் சூதாட்டம் நடத்துவது வழக்கம். அவ்வப்போது நடைபெறும் சூதாட்டத்தை பிரபலப்படுத்த நடிகர், நடிகைகளை அவர் விளம்பரபடுத்தி வந்துள்ளார். இந்தாண்டு ஜூன் மாதம் நேபாளம் நாட்டில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரவீன் சூதாட்டம் நடத்தினார்.  சூதாட்டத்தில் வென்றவர்களுக்கு ஹவாலா பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், ஐதராபாத் மற்றும் ஆந்திராவில் அவர் தொடர்புடைய 8  இடங்களில் வருவாய் புலனாய்வு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், சூதாட்டத்தை பிரபலப்படுத்த நடிகர், நடிகைகளை அவர் ஒப்பந்தம் செய்து பயன்படுத்தியுள்ளார். பிரபல பாலிவுட் மற்றும் டாலிவுட் நடிகர், நடிகைகளான மல்லிகா செராவத்திற்கு ரூ.1 கோடி, அமிஷா பட்டேலுக்கு ரூ.80 லட்சம், கதாநாயகன் கோவிந்தாவிற்கு ரூ.50 லட்சம், நடிகைகள் ஈஷா ரீபாவிற்கு ரூ.40 லட்சம், டிப்பிள் ஐடிக்கு ரூ.40 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், பலருக்கு லட்சக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது.  வருகிற 1ம் தேதி பிரவீன், அவரது நண்பர் மாதவர் ஆகியோர் விசாரணைக்காக ஐதராபாத்தில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகபூப் நகர் மாவட்டம் கட்தால் அருகே 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிக்கோட்டி பிரவீனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வனத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டத்திற்கு புறமான வகையில் மலைப்பாம்புகள், பறவைகள், அபூர்வ பறவைகள், குதிரைகள், நாய்கள், ராட்ஷத பல்லிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய அனுமதி பெற்ற பின் மட்டுமே இந்த வன உயிரினங்களை நான் வளர்ந்து வருகிறேன் என்று சிக்கோட்டி பிரவீன் வனத்துறை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து, அதிகாரிகள் வனத்துறையிடம் அனுமதி பெற்று இருக்கிறாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கோட்டி பிரவீனிடம் நடத்திய விசாரனையில் கேசினோ சூதாட்டத்தில் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் நேபாளம் சென்று கலந்து கொண்டிருப்பது தற்போது 2 மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.