சென்னையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு செங்கல்பட்டில் நிலம் இருந்துள்ளது. அதில் சில பிரச்னைகள் நிலவவே, அதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்னா என்கிற பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியுள்ளார். தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பிரச்னையை சரி செய்துத் தருவதாக சொல்லி, கருப்பையாவிடம் பிரசன்னா ரூ.25.59 லட்சம் வரை வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

மேலும் பிரச்னை சரியாக மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என கருப்பையாவிடம் 15 சவரன் தங்க நகையும் வாங்கியிருக்கிறாராம். ஆனால், அதன் பிறகும் கூட கருப்பையாவின் நிலப்பிரச்னை சரியாகவில்லை.
அதற்கு பிரசன்னா நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார். இதையடுத்து கருப்பையா, பிரசன்னா மீது செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி உள்ளிட்டோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்பார்க்காத பிரசன்னா மனம் உடைந்து குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தார். பிரசன்னா, அவர் மனைவி, தாய், மகள்கள் ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இதில் ஒரு மகள் விஷம் குடிக்காமல் தப்பி சென்று அருகில் உள்ளவர்களிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்கள் அனைவரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். பிரசன்னா, மனைவி, மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கு முன்பு பிரசன்னா ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், “பொய்யான தகவலை சொல்லி வழக்கு போட்டிருப்பதால் மனம் உடைந்திருக்கிறோம்.


குடும்பத்துக்கே பிரச்னையை உருவாக்குவதால், எங்களுடைய முடிவை தேடிக் கொள்ளலாம் என்றிருக்கிறோம். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது இந்த முடிவுக்கு சங்கரன், கருப்பையா தான் காரணம். எங்களது நிலை இன்னொரு ஜோதிடருக்கு வரக்கூடாது” என்று கூறியுள்ளார்.