நாட்டில் மின்சார பாவனை இருபது வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மின்சார பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகளை (units) பயன்படுத்தியுள்ளனர். ஆனால் தற்போது அந்த அலகுகளின் எண்ணிக்கை 38 மில்லியனாக குறைந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மின் துண்டிப்பு அத்துடன், பாவனையாளர்கள் மின்சாதனங்களை குறைவாக பயன்படுத்துவதற்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டமை போன்ற காரணங்களினால் இவ்வாறு மின்சாரப் பயன்பாடு குறைவடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்மின் உற்பத்தியை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. போதிய எரிபொருள் இல்லாததால் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்த நிலையில் உள்ளன. எனவே, சில மாதங்களுக்கு தினமும் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், துண்டிப்பு இடம்பெறாமல் இருப்பதற்கு இடமில்லை, ஆனால், நீர்மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால், நீண்ட நாட்களுக்கு மின் துண்டிப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் ஆனைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நூறு மில்லியன் அலகு (unit) மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மட்டம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இதுவரை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.