தைவானை தனிமைப்படுத்த முடியாது; சீனாவுக்கு அமெரிக்கா சவால்| Dinamalar

ஜப்பான் : தைவானை சீனாவால் தனிமைப்படுத்த முடியாது என ஜப்பானில் சீன ராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சவால் விடுத்தார்.டோக்கியோ, சீனாவிடம் இருந்து பிரிந்து விட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும் சீனா அப்படி நினைக்கவில்லை.

தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. கடந்த மே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்கு பயணம் செய்தபோது, “சீனா பலவந்தமாக தைவான் தீவை கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்கப்படைகள் தைவானை இராணுவ ரீதியாகப் பாதுகாக்கும்” என எச்சரித்திருந்தார். தைவான் பிரச்னையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் மோதல் போக்கு தொடர்கிறது.சீனாவின் மிரட்டல்களுக்கு மத்தியில் ஆக., 2- இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சென்றார். அந்நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து, அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தைவானை சுற்றி சீனா முற்றுகையிட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்நடவடிக்கை தங்கள் இறையாண்மையை மீறுவதாகவும், முற்றுகைக்கு சமமாக உள்ளதாகவும் தைவான் கூறுகிறது.ஜப்பான் சென்ற நான்சி கூறியதாவது: தைவானில் அமைதி நிலவ வேண்டும். சீன அரசு அமெரிக்க பிரதிநிதியான என் தைவான் பயணத்தை “ஒரு சாக்காக” பயன்படுத்தி அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சீனா தைவானை தனிமைப்படுத்த முயலுகிறது. தைவானை உலக சுகாதார அமைப்பிலிருந்து ஒதுக்கியுள்ளது.

இதுபோன்ற செயல்களால் சீனா, தைவானை மற்ற இடங்களுக்கு செல்வதையோ அல்லது பங்கேற்பதையோ தடுக்க முயற்சி செய்யலாம். நாங்கள் தைவானுக்கு பயணிப்பதை தடுப்பதன் மூலம் சீனாவால் தைவானை தனிமைப்படுத்த முடியாது. அமெரிக்க அதிபர் சீன அதிபருடன் தொடர்பு கொண்டுள்ளார். நாங்கள் இரண்டு பெரிய நாடுகள், எங்களுக்குள் தொடர்பு இருக்க வேண்டும். வணிக நலன்கள் காரணமாக சீனாவில் மனித உரிமைகளுக்காக அமெரிக்கா பேசாவிட்டால், உலகில் எங்கும் மனித உரிமைகளைப் பற்றி பேசுவதற்கான அனைத்து தார்மீக அதிகாரத்தையும் அமெரிக்கா இழந்துவிடும். தைவான் உலகின் சுதந்திரமான நாடுகளில் ஒன்று என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.