அமெரிக்கா Vs இந்தியா… ரூபாய் மதிப்பை உயர்த்த ஆர்.பி.ஐ எடுத்த அதிரடி முடிவு இதுதான்…

இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பலரும் பேசும் அளவுக்கு பரபரப்பான பிரச்னையாக மாறியிருக்கிறது ரூபாய் மதிப்பின் இறக்கம். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80 என்கிற அளவைத் தொட்டு, கணிசமான அளவில் மதிப்பு உயராமல் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்னை பற்றி நாம் புரிந்துகொள்வதற்குமுன், நாம் ஏன் அமெரிக்க டாலரைக் கொண்டு பிற நாட்டு பணத்தினை மதிப்பிடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

அமெரிக்கன் டாலர்

இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடு எது என்று பார்த்தால், அது அமெரிக்காதான். உலகளவில் 180 நாடுகளின் அதிகாரபூர்வ பணம் புழக்கத்தில் உள்ளன. ஆனால், உலக வர்த்தகம் 85% அமெரிக்க டாலரைச் சார்ந்துள்ளது. உலகளவில் 39% கடன்கள் அமெரிக்க டாலரில் நிகழ்கின்றன. உலக நாடுகளின் அந்நியச் செலாவணியில் 64% அமெரிக்க டாலர்கள்தான். அவ்வளவு ஏன், 65% அமெரிக்க டாலர்கள், அமெரிக்காவைத் தாண்டி பிற நாடுகளில்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால்தான் இன்றைய உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகாரப் புள்ளியாக மாற்றியுள்ளது.

சரி, டாலருக்கு நிகராக நமது நாட்டின் பணத்தின் மதிப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்கிற அடுத்த முக்கியமான கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

இது ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. உலக அளவில் அமெரிக்க டாலருக்க்கான தேவை மற்றும் அளிப்பு (Supply & demand), இந்திய ரூபாய்கான தேவை மற்றும் அளிப்பு, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான தேவைகள் எனப் பல்வேறு காரணங்களைப் பொறுத்து அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு தீர்மானம் ஆகிறது.

ரூபாய் நோட்டு

ஒரு நாட்டின் அதிகாரபூர்வ நாணயத்தின் தேவை உலகளவில் உயரும்போது அதன் மதிப்பு அதிகரிக்கும்; தேவையைவிட அளிப்பு (supply) அதிகமாக இருக்கும்போது மதிப்பு குறையும். இதுதான் நாணயங்களின் மதிப்பு நிர்ணயமாவதன் பின்னணி.

இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் ஏற்பட்ட பணவீக்கப் பிரச்னையை சமாளிக்க வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கின. அமெரிக்க ஃபெட் அமைப்பு வட்டி விகிதத்தை 0.25 லிருந்து 1.75 சதவிகிதமாக உயர்த்தியது.

இதன் காரணமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் உலகின் பிற நாடுகளில் செய்திருந்த முதலீட்டைத் திரும்ப எடுத்து, தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் வெளியேறியதால், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரசரவென்று சரிந்தது.

சரியும் இந்தியா ரூபாய் மதிப்பைத் தடுத்து நிறுத்த நமது மத்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகள் செய்தது. ரிசர்வ் வங்கி அதனிடம் இருந்த டாலர் கையிருப்பை அதிக அளவில் விற்றதன் மூலம் அளிப்பு அதிகமாக ரூபாய் மதிப்பு குறைவது தடுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியிடம் டாலர் கையிருப்பு 625 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதில் இருந்து சுமார் 50 பில்லியன் டாலர்களை விற்றதால், இப்போது கையிருப்பு சுமார் 575 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.

தங்க நகை

அதே நேரத்தில், தங்கத்தின் இறக்குமதியைக் கட்டுக்குள் கொண்டுவர, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவிகித்தில் இருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தியது.

இந்த இரு நடவடிக்கைகளால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவைதை ஓரளவு தடுக்க முடிந்ததே தவிர, சரிவில் இருந்து முழுமையாக மீட்கவோ, மதிப்பை அதிகளவில் உயர்த்தவோ முடியவில்லை.

இன்றைய நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-க்குள் இருக்கிறது. இது 70, 78 என்று இனிவரும் காலத்தில் மாறவேண்டுமே தவிர, 81, 82 என்று செல்லக்கூடாது என்பதே நம் எதிர்பார்ப்பு. நம் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்.

– விகடன் மாணவப் பத்திரிகையாளர் நவீன் குமார்.போ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.