என்.வி.ரமணாவின் பதவிகாலம் 26ம் தேதியுடன் முடியும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியின் பதவிகாலம் 74 நாட்களே: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு கோரிக்கை என்னாச்சு?

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க உள்ள நிலையில், அவர் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருப்பார். அதேநேரம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான கோரிக்கை நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் வழக்கமான நடைமுறைகளை ஒன்றிய சட்ட அமைச்சகம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதன்படி யு.யு.லலித் 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார். புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள யு.யு.லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு (74 நாட்கள் மட்டுமே) குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் யு.யு.லலித் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி யு.யு.லலித் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகி பின்னர் தலைமை நீதிபதியான இரண்டாவது நீதிபதி ஆவார். ஏற்கனவே நீதிபதி எஸ்.எம்.சிக்ரி வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகி அதன்பின் 13வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 1971 முதல் 1973ம் ஆண்டு ஏப்ரல் வரை இருந்தது. இருப்பினும், நீதிபதி யு.யு.லலித்தின் பதவிக்காலம் வெறும் 74 நாட்கள் மட்டுமே. அவர் நவம்பர் 8ம் தேதி ஓய்வு பெறுவார். அவருக்கு அடுத்ததாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக வரவாய்ப்புள்ளது. இவர் வரும் 2028ம் ஆண்டு மே மாதம் ஓய்வு  பெறுவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நீதிபதி யு.யு.லலித், கடந்த 2014ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.அவரது தந்தை மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக  இருந்துள்ளார். கடந்த 2019 ஜனவரியில் அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில்  தீர்ப்பளித்த அரசியலமைப்பு பெஞ்சில் இருந்து நீதிபதி யு.யு.லலித்  விலகினார். இந்த வழக்கில் இவர் 1997ம் ஆண்டு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்  கல்யாண் சிங்கின் வழக்கறிஞராக இருந்ததாகவும், அதனால் இந்த அமர்வில் தான்  இடம்பெறக்கூடாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்கள் வரை உயர்த்த வேண்டும் என்று பேசப்படும் நிலையில், ஓய்வு வயதை உயர்த்துவதற்கான யோசனையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்தது. இருந்தாலும் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் யோசனையானது, ஒன்றிய அரசால் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை. ஒருவேளை ஒன்றிய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, நீதிபதிகளின் ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தினால், நீதிபதி யு.யு.லலித், நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக வரும் 2024ம் ஆண்டு நவம்பர் வரை பணியில் இருப்பார். இரண்டு ஆண்டுகள் எட்டியதும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுவார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தற்போது 65 ஆக உள்ளது. இதனை 67 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆகவும் உயர்த்த நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரை செய்தது. ஆனால் அவை ஏற்றுக் ெகாள்ளப்படாமல் நிலுவையில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா. அமெரிக்க நீதிபதிகளுடனான சந்திப்பில் பேசும்போது, நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்றும், 65 வயதில் ஓய்வு பெறும் போது அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவில் ஒருமுறை நீதிபதியாக இருந்தால், அவர் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் இருப்பார்; ஓய்வு பெறுவதற்கு அவருக்கு வயது அடிப்படையாக இருக்காது என்று கூறினார். இவரது பேச்சின் மூலம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்றும், அப்போதுதான் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாததால், நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கும் திட்டம் அமலுக்கு வருமா? என்பது கேள்வியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.