தமிழகத்தில் கனமழையால் 41 வீடுகள் சேதம், முகாம்களில் 6,109 பேர் தங்கவைப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 12 மாவட்டங்களில் 41 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 நிவாரண முகாம்களில் 6,109 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்ட தகவல்: “தென் மேற்கு பருவமழைக் காலத்தில் 1-6-2022 முதல் 5-8-2022 முடிய 266.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 25 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.66 மி.மீ. ஆகும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் அதிக மழை பெய்துள்ளது.

இந்த மழையால் மனித உயிரிழப்பு விவரம் எதுவும் பதிவாவில்லை. தருமபுரி, புதுகோட்டை, நீலகிரி மாவ்டடங்களில் 4 கால்நடைகள் மரணம் அடைந்துள்ளன. 12 மாவட்டங்களில் 23 குடிசைகள் முழுவதுமாகவும், 7 குடிசைகள் பகுதி அளவும், 11 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்து உள்ளது. 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 நிவாரண முகாம்களில் 6,109 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (6ம் தேதி ) காலை 9 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து 1,50,000 கன அடி உபரி நீரும், பவானிசாகர் அணையிலிருந்து 25,500 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP – Common Alert Protocal) மூலம் 22.76 இலட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

6 மற்றும் 7ம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.

கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 77 வீரர்களுடன் 3 குழுக்களும், நீலகிரி மாவட்டத்தில் 85 வீரர்களுடன் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 65 வீரர்களுடன் 2 குழுக்களும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 1 குழுவும் ஆக மொத்தம் 348 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் 11 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.