திருப்பதி கோவிலில் 3நாள் பவித்ரோற்சவம்! நாளை மறுதினம் தொடங்குகிறது…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சில பூஜைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

திருப்பதி சென்றால் திருப்பம் நிச்சயம் என்று புகழப்படும் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாடு முழுவதும் இருந்து தினசரி லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றன.  வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி உலக புகழ்பெற்ற கோவில் மட்டுமின்றி அதிக அளவு வருமானத்தை ஈட்டும் கோவிலாகும். ஏழுமலையான தரிசித்து ஆசி பெற  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர்.

இந்த கோவிலில்,  கோவில் ஊழியர்கள், பக்தர்கள் என பலரும்,தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்தை போக்கி, புனிதம் காக்க 3 நாள் பவித்ரோட்சம் நடத்தப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டு,   வருகிற 8ம் தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. வரும் 8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதனையொட்டி கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை 3 நாட்கள் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்

பவித்ரோற்சவத்தையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடப்பதால் சஹஸ்ர தீபலங்கார சேவை, 9-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதன சேவை, 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.