நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க தமிழக அரசு மறைமுக முயற்சி! பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி செய்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  தமிழகத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே தமிழகம் முழுமையிலும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார். தற்போது முதலமைச்சராக உள்ள மு. க ஸ்டாலின் தலைமையிலான அரசு கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்வதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. இச்செயல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி கலைஞருக்கு செய்கிற துரோகமாகும் என்பதை உணர வேண்டும்

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது.  தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்குவதாக  திடீரென அறிவித்துள்ளது. இது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. 16 நவீன அரிசி ஆலைகளில் தனியார் மூலம் கொள்முதல் செய்து அவற்றை அரவை செய்து அரிசியாக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல.  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி மேற்க்கொண்டு வந்தது வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்காமல், அரசியல் கட்சிகள், விவசாயிகளுடைய கருத்தை கேட்டறியாமல் தன்னிச்சையாக மறைமுகமாக கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாக கொள்முதலை கைவிட்டு இருப்பதை திரும்பப் பெற தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

காவிரியின் உபரி நீர் நாமக்கல், கரூர்,திருச்சி,தஞ்சாவூர்,மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களை கடந்து கடலிலே கலக்கின்ற வரையிலும் வழியோர கிராமங்களில் வாழை, குறுவை சாகுபடி மேற்கொண்டிருந்த விவசாயிகள் உபரி நீர் சூழ்ந்து பயிர்கள் அழிவதை பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். தற்போது குறுவைக்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு இருக்கும் நிலையில்,அதற்கான மகசூல் இழப்பை கணக்கில் கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.

பேரிடர் நிவாரண நிதி என்கிற பெயரில் விவசாயிகளுடைய உரிமையை பறிக்க முன்வரக்கூடாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய நிலையை உணர்ந்து தமிழக முதலமைச்சர் விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.