சென்னை: எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவதில் முன்னிலை பெற்றுள்ளது என்று அந்நிறுவனத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார்.
காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒன்றிணைந்த உடல்நலம் அறிவியல் துறையில் பேச்சு மொழிநடை நோயியலில் முதுகலை பட்டப் படிப்பு (M.Sc. Speech Language Pathology) முடித்த மாணவ, மாணவிகள் 11 பேர் அமெரிக்காவின் கலிபோர்னியா பிளேசடோன் பகுதியில் இயங்கி வரும் இ.டி. தியரி மருத்துவ நிறுவனத்தில் பேச்சு மொழிநடை நோயியல் நிபுணர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர். ஆண்டுக்கு 70,000 முதல் 72,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.56 லட்சம்) ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். எஸ்ஆர்எம் மருத்துவம் மற்றும் உடல்நலம் அறிவியல் இணை துணைவேந்தர் லெப்டினேன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார், டீன் டாக்டர் ஏ.சுந்தரம், கூடுதல் பதிவாளர் டி.மைதிலி, துறைத் தலைவர் வி.எச்.சவிதா, இஎன்டி துறைதலைவர் ஜி.செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் டி.ஆர்.பாரிவேந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்ஆர்எம்கல்வி நிறுவனமும் ஒன்றாகும். மாணவர்களுக்கு உலகத் தரத்தில் கல்வி வழங்குவதுடன் சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கி வருகிறது.
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆண்டு சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் சர்வதேச அளவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதிலும் ஒரு மாணவர் அமேசான் ஜெர்மனி நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளன. அப்படி இருக்கையில் 15 ஆண்டுகளே ஆன எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட உலகில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அங்கு எஸ்ஆர்எம் முன்னாள் மாணவரை காண முடிகிறது.
17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் 1,600 படுக்கைகளுடன் பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகளுடன் இயங்கி வருகிறது.
இங்குள்ள ஒலி கேட்டல் மற்றும் பேச்சு மொழிநடை நோயியல் துறையில், பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கு காது கேட்கும் திறன் பற்றி மதிப்பீடு செய்தல், பேச்சு, கேட்கும் திறன் கோளாறு உள்ளிட்ட பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து புணர்வாழ்வு அளிக்கும் பணிகள் நடக்கின்றன என்றார்.