இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 7 மாதத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 7 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் குறித்த விரிவான டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்க தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரம் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதால் தனியுரிமை தொடர்பான தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் கடந்த 7 மாதங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்டதில் இரட்டைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது அல்லது திருத்தப்பட்டது என்று தலைமை தேர்தல் அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘நாடு முழுவதும் கடந்த 9 மாதத்தில் 11,91,191 வாக்காளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் ஒத்த மாதிரியாக அடையாளம் காணப்பட்டது. அதனால் அவர்களில் 927,853 பேரின் விபரங்கள் நீக்கப்பட்டன. இவை அந்தந்த வாக்குச்சாவடி மட்டத்தில் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்தவொரு வாக்காளர் பெயர் உள்ளிட்ட விபரங்களை நீக்காது. அதேநேரம் ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பு 3.18 கோடி வாக்காளர்களின் பெயர்கள் ஒத்த பதிவுகளை கொண்டிருந்தன. சரிபார்ப்புக்கு பின்னர், 98,00,412 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சுமார் 20 லட்சம் வாக்காளர்களின் விபரங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் அதிக வேகத்தில் நடக்கும். நாடு முழுவதும் தற்போது கிட்டத்தட்ட 940 மில்லியன் (94 கோடி) வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.