கடும் அதிருப்தியில் இருக்கும் அரசு ஊழியர்கள்… பிடிஆர் மீது பாயும் முதல்வரின் அதிரடி நடவடிக்கை!

ஒன்றிய அரசு:
துறை ரீதியான தமது வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பழக்கமான ஒன்றாக உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்க பின்னர் தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று புதிய சொல்லாடலில் அழைத்து தேசிய அளவில் கவனத்தை பெற்ற பிடிஆர், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு, அரிசி உள்ளி்ட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் ரசிக்கும்படியாக இல்லை எனவும், இவரது பேச்சு மற்ற மாநில நிதியமைச்சர்களை தூண்டிவிடுவதாக உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சில மாதங்களுக்கு முன் ரிப்போர்ட் வந்ததாம். அத்துடன் பிடிஆரை மாநில நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றினால் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதிகள் உரிய காலத்தில் கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் நிலையில் ஸ்டாலினுக்கு அப்போதே அறிவுறுத்தப்பட்டதாம்.

ஆனால் அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் இந்த விஷயத்தை ஆறப்போட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் முடிந்து பிடிஆர் ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழாததால், டிபிஆரால் ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கு தற்போது வேறு விதத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி:
2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில், ‘திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி மிகவும் முக்கியமானது. தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை திமுக அரசு இன்னமும் எடுக்காதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது தங்களது அதிருப்தியை அவ்வபோது வெளிப்படுத்தி வருகின்றனர்.

சர்ச்சை கருத்து:
இந்த நிலையில். அரசின் மீதான அவர்களின் கோபத்தீயில் எண்ணெய்யை ஊற்றுவதாக அமைந்துள்ளது அரசு ஊழியர்கள் குறித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் சமீபத்திய பேச்சுகள். அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக மட்டும் அரசு மாதந்தோறும் இவ்வளவு செலவு செய்ய வேண்டி உள்ளது. அத்துடன் அவர்களுக்கு DA உள்ளிட்ட சலுகைகளையும் அளிக்க வேண்டியுள்ளது. மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கதான் செய்கின்றனர் என்பன போன்ற பிடிஆரின் பேச்சை கேட்டு அரசு ஊழியர்கள் கொந்தளித்து போய் உள்ளனர் என்றுதான் சொல்கின்றனர்.

இதன் வெளிப்பாடாகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, தமிழக நிதியமைச்சரை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் மாநிலம் தழுவிய போராட்டத்தை அண்மையில அறிவித்திருந்தது. கூட்டமைப்பின் நிர்வாகிகளை முதல்வர் அழைத்து பேசியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதல்வர் நடவடிக்கை:
இது ஒருபுறம் இருக்க, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிவரும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருடனான சந்திப்பின்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனராம். அவர்களின் இந்த கோரிக்கையை கவனமாக கேட்ட முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளராம்.

ஏற்கெனவே பிடிஆர் மீது மத்திய நிதியமைச்சகம் செம கடுப்பில் இருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களும் புகார் வாசித்து வருவதால் அவர் மீது முதல்வர் ஸ்டாலின் கூடிய விரைவில் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கின்றன கோட்டை வட்டாரங்கள். அதற்கு பின்னர், அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் விஷயத்தில் பிடிஆர் அடக்கி வாசிப்பார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.