சிவகங்கை: “தாய்மொழியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால், நம்மால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக எளிதாக, மிகச் சரியாக புரிந்துகொள்ள முடியும்” என்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் கலைச்செல்வி கூறியுள்ளார்.
இந்திய அறிவியல் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநர் கலைச்செல்வி காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தாய்மொழியை நான் முழுமையாக புரிந்து கொண்டதாலும், அதனை உள்வாங்கிக் கொண்டதாலும் என்னால் இனிமேல் எந்த மொழியையும் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
தாய்மொழியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால், நம்மால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக எளிதாக, மிகச் சரியாக புரிந்துகொள்ள முடியும். அதன்மூலம் அந்த துறையில் மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்பதை நான் ஆழமாக நம்பினேன். அந்த நம்பிக்கைதான் இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ந.கலைச்செல்வி அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் விஞ்ஞானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.