பாட்னா: பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டணி அரசில் லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தேஜஸ்விக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை மாநில காவல்துறை இயக்குனர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுசில் மோடி கூறுகையில், ‘அவர்களுக்கு ஏன் அதிகபட்ச பாதுகாப்பு தேவை? அவர்கள் ஆட்சிக்கு வந்ததால் மக்கள்தான் அச்சத்தில் இருக்கிறார்கள்,’ என்றார்.
